அடுத்த பிரதமர் விஜயா? காங்கிரஸ் தலைவர் அதிரடி

தமிழகத்தின் முதல்வராக, தவெகவின் தலைவர் விஜய் பொறுப்பேற்று இப்போது தான் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனிடையே, தவெகவினர் சிலர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று கூறி வருகின்றனர்.  அதாவது, வருகின்ற 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட்டு இந்தியாவின் பிரதமராவார் என்று ஆருடம் கூறி வருகின்றனர்.  

மேலும், முதல்வர் விஜய்க்கு தென்னிந்தியா மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களிலும் மிகப் பெரிய அளவிலான ஆதரவு இருப்பதாக, அவர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, பிரபல செய்தி ஊடகம் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டிருப்பதாகவும்,  அதில் முதல்வர் முதல்வர் விஜய் பிரதமராக 9 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.   

இது ஒரே கூட்டணியில் உள்ள தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில், இரு கட்சியினருக்குமிடையிலான இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல, வருகின்ற செப்டம்பர் 9 அன்று தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கான சந்திப்பு நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கூட்டணிக்குப் பெயர் வைத்தல், கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் போன்றவை குறித்து விவாதிக்கப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள கருத்து, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.  இது குறித்து அவர் பேசுகையில், ”வந்தந்திகள் மூலம் யாரும் இதுபோன்ற குழப்பங்களை உருவாக்கக் கூடாது. 2029-ல் இந்தியா கூட்டணியின் முகமாக ராகுல் காந்தி மட்டுமே இருப்பார். இந்தியா கூட்டணி முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு சில மாநிலங்களில் கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிடும் சில சிக்கல்கள் மட்டுமே உள்ளன. மற்றபடி, இந்தியா கூட்டணிதான் முன்னோக்கிச் செல்கிறது. அதுவே உண்மை” என்று தெரிவித்திருந்தார்.  இதன் மூலமாகப் பிரதமர் வேட்பாளர் விஜயா அல்லது ராகுலா என்ற கேள்விக்கு, இவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், அடுத்த தேர்தலின் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என உறுதிப் படத் தெரிவித்துள்ளது, அக்கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இது குறித்துப் பேசியிருந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், ராகுல்காந்தி தான் இந்தியாவின் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Source link