தேசிய அளவிலான தேசிய பொதுப் பேச்சுப் போட்டி 2026 போட்டியின் ஜூனியர் பிரிவில் விருதுநகர் மாணவி லயா ஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்று முதலிடம் பிடித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள பி.எஸ். சிதம்பரநாடார் சீனியர் ஆங்கிலப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் லயா ஸ்ரீ, இந்தியா முழுவதும் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான பொதுப் பேச்சுப் போட்டியில் பங்கேற்று, அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பாகத் தேர்வாகி இறுதியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
தேசிய பொதுப் பேச்சுப் போட்டி என்பது இளைஞர்களிடம் பேச்சுத்திறன், கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன், தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் மேடைப் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியை கொச்சியைச் சேர்ந்த தேசிய பொதுப் பேச்சு மற்றும் கல்வி அறக்கட்டளை என்ற பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை நடத்துகிறது. 2026-ம் ஆண்டுக்கான போட்டியின் இறுதிச்சுற்று செப்டம்பர் 6-ம் தேதி கொச்சியில் உள்ள ஆசியக் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புப் புத்தாக்கப் பள்ளி (ASADI) வளாகத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 225 பேர் பங்கேற்றனர். முதல் கட்டமாக நடைபெற்ற காணொளித் தேர்வுச் சுற்றில் (Video Selection Round) லயா ஸ்ரீ தேர்வானார். தொடர்ந்து நடைபெற்ற ஆன்லைன் அறை இறுதி சுற்றிலும் சுற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார். அரை இறுதிச்சுற்றுக்கு மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதிலிருந்து 10 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த 10 இறுதிப் போட்டியாளர்களில் லயா ஸ்ரீயும் இடம் பெற்றார். செப்டம்பர் 6-ம் தேதி கொச்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வான இறுதிப் போட்டியாளர்கள் தங்களது பேச்சுத்திறனை வெளிப்படுத்தினர்.
இதில் சிறப்பாகப் பேசிய லயா ஸ்ரீ, ஜூனியர் பிரிவின் தேசிய சாம்பியனாகத் தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தைப் பெற்றார். இதன்மூலம், 225 பேர் பங்கேற்ற தேசிய அளவிலான போட்டியில், வீடியோ தேர்வுச்சுற்று, ஆன்லைன் அரையிறுதிச்சுற்று மற்றும் இறுதிச்சுற்று என அனைத்து நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்து லயா ஸ்ரீ தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். விருதுநகர் மாணவி தேசிய அளவிலான பொதுப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றிருப்பது பள்ளிக்கும், விருதுநகருக்கும் பெருமை சேர்த்துள்ளது.
