ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ-க்களை ஹோட்டலில் அடைத்து மிரட்டிய யாரு? குதிரைப் பேரம் குறித்து ஷாஜகான்

ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ ஃபாருக் பாஷா சுட்டிக்காட்டிய குதிரைப் பேரப் பேச்சுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஷாஜகான், மே 8-ஆம் தேதி இரவு 2 ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ-க்களை அக்கார்டு ஹோட்டலில் அடைத்து வைத்து மிரட்டியது யாரு என்று கூற வேண்டியிருக்கும் என்று கூறிய நிலையில், குதிரைப் பேரத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவையில் உறுதிபடத் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய அமைச்சர் ஷாஜகான், தேர்தல் முடிவுகளுக்குப் பின் மே 8-ம் தேதி இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-க்கள் இருவரை அக்கார்டு ஹோட்டலில் அடைத்து வைத்து மிரட்டியது யார் என சொல்ல வேண்டியிருக்கும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்டு ஹோட்டலில் எம்.எல்.ஏ-க்களைத் தங்க வைத்து குதிரைப் பேரம் நடத்தியது யார் என்பது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று பேரவையில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தன்னையும் ஐ.யூ.எம்.எல்-ன் மற்றொரு எம்.எல்.ஏ-வைத் தேடி வந்த சிலர், பெட்டி பெட்டியாகப் பணத்தை நீட்டி விரும்பிய அமைச்சர் பதவியைத் தருவதாகக் கூறி குதிரைப் பேரத்தில் ஈடுபட முயன்றதாகவும், கொள்கைக்காக அந்த ஆசையை நிராகரித்து அவர்களை விரட்டியடித்ததாகவும் ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய ஐ.யூ.எம்.எல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜகான்: “2026-ம் ஆண்டு புதிய ஆட்சி மலர்ந்த பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய அதிர்வலைகளை நாம் அனைவரும் பொதுமக்களும் கண்டு வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியின் உடைய தலையாய நோக்கமாக முதலமைச்சர் விஜய், லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு ஆட்சி என்பதை தொடர்ச்சியாக பிரகடனப் படுத்தி வருகிறார்கள். நேற்றைய முன் தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பாரூக் பாஷா திருவண்ணாமலையில் நடந்த கட்சி பொதுக்குழுவில் பேசியதை திரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி அமைந்த பிறகு ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி என்ற பெயரில் இந்த ஆட்சி சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை மீறி பணம் வாங்குகிறார்கள், பேரம் பேசுகிறார்கள் என்பதெல்லாம் தலைமுறை தலைமுறைக்கு அரசியல் செய்ய முடியாது என்கிற சூழ்நிலை வந்துவிடும். 

தொடர்ச்சியாக, சோபா மாடல் என்றும் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேசுவதை பிரித்து பேசுவதாலும் சில விளக்கங்களை கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. தேர்தல் முடிவு வந்த பிறகு மே 4-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர்கள் பக்கம் நின்று முடிவெடுப்பதாக அறிவித்திருந்தாலும் மே 9-ம் தேதி ஒன்றிய அரசினுடைய கைப்பாவையாக ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை ஒற்றை காரணத்துக்காக அளித்தோம். இருப்பினும், அவர் சொல்ல வந்த குற்றச்சாட்டு மே 7-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை தொடர்பு கொண்டவர்கள் யாரை முதலமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் என்பதை பாரூக் பாஷா குறிப்பிட்டு சொல்லியுள்ளார்கள். எதிர்க்கட்சியை பொருத்தவரை முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற காரணத்தினால் மே 7-ம் தேதி ஒரு நடவடிக்கை எடுத்தார்கள். தி.மு.க தலைமை அப்படி ஒரு முடிவை எடுத்து முஸ்லிம் லீக்கிடம் சொன்னது. மே 8-ம் தேதி ஒரு முடிவு எடுத்து மாற்றி இன்னொரு யோசனையை சொன்னது. முஸ்லிம் லீக் அதை ஏற்க மறுத்த காரணத்தினால் இன்னும் சொல்லப்போனால் கண்ணியமிக்க காயிதே மில்லத் தட்டிக் காத்த கட்சி என்பதால் சில விஷயங்களை ஓப்பனாக சொல்ல விரும்பவில்லை. 

மே 8-ம் தேதி இரவு 10 மணிக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு ஓட்டலில் கொண்டு போய் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யாரு? எங்களுக்கு காவல் போட்டது யாரு? என்று எல்லாம் உடைத்து சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடும். அதில் பல நிகழ்வுகள் நடந்தது. எங்களைப் பொருத்தவரை ஒன்றிய அரசினுடைய ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்கிற அடிப்படையில் முதலமைச்சர் விஜய்க்கு இந்த ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க நாங்கள் காரணமாக இருந்தோம். அதன் பிறகு நடக்கக்கூடிய நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்குமான ஒரு ஆட்சியாக, சிறுபான்மை சமுதாயத்தினருக்கான, ஆட்சியாக நம்முடைய மாநில சுயாட்சியை காக்கக்கூடிய ஆட்சியாக சமத்துவத்தை சமூக நீதியை காக்கக்கூடிய ஒரு ஆட்சியாக இருந்த காரணத்தினால் நாங்கள் இன்னும் மனமுவந்து பல மடங்கு அன்போடு நாங்கள் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று ஷாஜகான் பேசினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ஐ.யூ.எம்.எல் கட்சியைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களை அக்கார்டு ஹோட்டலில் யார் தங்க வைத்தார்கள்? அந்த அக்கார்டு ஹோட்டல் உரிமையாளர் யார் என்றால், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் உடைய ஹோட்டல் அது. அப்போது அவர்களை அங்கே தங்க வைத்தவர்கள் யார் என்று கூடிய விரைவில் விசாரணை நடத்தப்படும் என்பதை இங்கே பதிவு செய்கிறோம். அதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? பொதுமக்கள் பார்வையில் யார் குதிரை பேரம் செய்தார்கள் என்றால் தி.மு.க தான் குதிரை பேரம் நடத்தியது என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம்” என்று கூறினார்.

Source link