பிஎம் கிசான் 24-வது தவணை: ஒரே தவணையில் ரூ. 4,000 பெற இதை உடனே செய்யுங்க

நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. ‘பி.எம்.கிசான்’ (PM Kisan) திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்த தவணைத் தொகை விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 6,000 நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் 23-வது தவணை கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. வழக்கமாக 4 மாதங்களுக்கு ஒருமுறை தவணைத் தொகை வழங்கப்படும் என்பதால், அக்டோபர் மாதத்துடன் 4 மாதங்கள் நிறைவடைகின்றன. மேலும் அக்டோபர் மாதம் முதல் பண்டிகைக் காலம் தொடங்குவதாலும், அடுத்த மாதமே தவணைத் தொகை விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

யாருக்கு ரூ. 4,000 கிடைக்கும்?

தற்போது சில விவசாயிகளின் கணக்குகளில் வழக்கமான ரூ. 2,000-க்கு பதிலாக ரூ. 4,000 வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது. e-KYC மற்றும் நில விவரங்களை இணைத்தல் (Land Seeding) போன்ற சரிபார்ப்பு நடைமுறைகளை சரியான நேரத்தில் முடிக்காததால், பல விவசாயிகளுக்கு கடந்த 23-வது தவணைத் தொகை கிடைக்காமல் நிலுவையில் இருந்தது.

தற்போது அந்தச் சரிபார்ப்பு நடைமுறைகளை முழுமையாக முடித்துள்ள விவசாயிகளுக்கு, நிலுவையில் உள்ள 23-வது தவணைத் தொகையும் சேர்த்து ரூ. 4,000-ஆக வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இ-கே.ஒய்.சி. மற்றும் லேண்ட் சீடிங் (Land Seeding) ஏன் அவசியம்?

உண்மையான தகுதியுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உதவித்தொகை சென்றடைவதை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

லேண்ட் சீடிங் (Land Seeding), விவசாயியின் நில விவரங்களை பிஎம் கிசான் போர்ட்டலுடன் இணைத்துச் சரிபார்ப்பதாகும். மாநில அரசின் நிலப் பதிவேடுகளில் பெயர் உள்ள நில உரிமையாளர்களுக்கு மட்டுமே இந்த நிதி உதவி கிடைக்கும்.

நில விவரங்களில் ஏதேனும் சிக்கல் இருந்தால், விவசாயிகள் உடனடியாக மாநில நிலப் பதிவேட்டுத் துறையை அணுகித் தங்கள் விவரங்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.

உங்கள் நிலையை அறிவது எப்படி?

விவசாயிகள் தங்கள் பணம் செலுத்தும் நிலை மற்றும் e-KYC விவரங்களைச் சரிபார்க்கக் கீழ்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

அதிகாரப்பூர்வ இணையதமான pmkisan.gov.in -க்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Know Your Status’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் கேப்ட்சா (Captcha) குறியீட்டை உள்ளிடவும்.

உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐப் பயன்படுத்தி உள்நுழைந்து, கணக்கு நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு முந்தைய தவணைத் தொகை கிடைக்கவில்லை என்றால், உடனடியாக e-KYC மற்றும் நிலச் சரிபார்ப்பு நடைமுறைகளை நிறைவு செய்து நிலுவைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Source link