அரசியல் சாசன உரிமையை கட்டுப்படுத்த முடியாது; தேவாலயத்தை புனரமைக்க ஐகோர்ட் அனுமதி

எழுதியவர்: ஆஷிஷ் ஷாஜி

வெறுமனே நிரூபிக்கப்படாத பயத்தின் அடிப்படையில் மட்டுமே பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக இணைந்து வாழ்வதற்கான அரசியல் சாசன உரிமையை கட்டுப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து கோயிலில் இருந்து சுமார் 45 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஜெபக்கூடத்தைப் புனரமைக்க வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சிவங்கை மாவட்டம் தயாபுரம் கிராமத்தில் உள்ள தேவாலயக் கட்டிடத்தை புனரமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ‘இந்து முன்னணி’ அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் என். திலீப் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

“சாத்தியமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து மனுதாரர் தெரிவிக்கும் பயம் மட்டுமே, ஒரு நிர்வாக உத்தரவில் தலையிடுவதற்கான காரணமாக இருக்க முடியாது. தகுதியான அதிகாரி தொடர்புடைய ஆதாரங்களை பரிசீலித்து, கள ஆய்வறிக்கை மூலம் அத்தகைய தகராறோ அல்லது உள்ளூர்வாசிகளின் எதிர்ப்போ இல்லை என்பதை உறுதி செய்துள்ள நிலையில் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டு உள்ளது.

நீதிமன்றம் தலையிட மறுத்தது ஏன்?

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2021-ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டது. 
ஏப்ரல் 2021-ல், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாமல் தேவாலயக் கட்டிடம் புனரமைக்கப்படுவதாக மனுதாரர் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, அந்த இடத்தை பூட்டி சீல் வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்பின்னர், ஜெபக்கூடத்தை புனரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோர பிரதிவாதிக்கு (பெயர் குறிப்பிடப்படவில்லை)  நீதிமன்றம் அனுமதி அளித்தது. மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கோயிலுக்கு மிக அருகில் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தை அனுமதிப்பது அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என வாதிட்டு, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இருப்பினும், அந்த இடத்தில் சுமார் 25 ஆண்டுகளாக ஜெபக்கூடம் இயங்கி வருவதாகவும், பழைய கட்டிடம் பலவீனமடைந்ததால் மட்டுமே தற்போதைய புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதாகவும் எதிர்மனுதாரர்கள் தெரிவித்தனர். கள ஆய்வில், கோயிலும் ஜெபக்கூடமும் சுமார் 45 மீட்டர் இடைவெளியில் இருப்பது கண்டறியப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 

மேலும், அந்த இடத்தில் சுமார் 25 ஆண்டுகளாக வழிபாடு நடைபெற்று வருவதாகவும், ஜெபக்கூடம் தொடர்ந்து செயல்படுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் உள்ளூர்வாசிகள் அதிகாரிகளிடம் தெரிவித்ததையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. ஜெபக்கூடத்தின் கட்டுமானமோ அல்லது அதன் பயன்பாடோ எந்தவொரு சட்டப் பிரிவையும் மீறியதாகவோ அல்லது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு, உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக இருந்ததாகவோ நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது.

“ஜெபக்கூடத்தின் கட்டுமானம் அல்லது பயன்பாடு ஏதேனும் சட்ட விதியை மீறுகிறது என்பதையோ அல்லது முந்தைய ரிட் மனுவில் இந்த நீதிமன்றம் வழங்கிய குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுக்கு முரணாக ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதையோ நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், மாவட்ட ஆட்சியரின் முடிவில் தலையிட இந்த நீதிமன்றம் விரும்பவில்லை” என்றது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரலாம் என்ற மனுதாரரின் அச்சத்தை நிராகரித்த நீதிபதிகள், நிர்வாக உத்தரவில் தலையிட அது ஒரு காரணமல்ல என்று கூறியது. மேலும், மனுதாரர் அந்த பகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்றும், எந்தவொரு சட்டவிரோதம், நடைமுறை அத்துமீறல், தன்னிச்சையான செயல்பாடு அல்லது நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்களை மீறியதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Source link