இப்பொழுது சினிமாவில் மமிதா பைஜு காலம். அவர் நடிக்கும் எல்லா படங்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சூர்யாவின் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது அதேபோன்ற ஒரு கதை அமைப்புடன் மலையாளத்தில் வெளியான ‘பெத்தலகேம் குடும்ப யூனிட்’ சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வெற்றி காரணமாக அதை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர். இந்த திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா? இல்லையா?
தன் காதலி எதிர்பாராத விதமாக மரணம் அடைந்த நிகழ்வுக்கு பிறகு திருமணமே செய்து கொள்ளாமல் திருமண வயதையும் தாண்டி 40 களில் இருக்கும் நிவின் பாலி கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். அவர் வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் வேறு ஒரு ஊரில் இருந்து குடிபெயர்கிறார் மமிதா பைஜூ. கல்லூரி மாணவியான இவர் தன் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டே அந்த வீட்டுப்பகுதியில் இருக்கும் நபர்களோடு பழகி வருகிறார். அப்பொழுது அவருக்கு நிவின் பாலி மீது காதல் வருகிறது. முதலில் நிவின் பாலி வயது காரணம் காட்டி காதலை மறுத்தாலும் பின்னர் ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக்கொண்டு காதலிக்கிறார். இந்த காதல் மமிதாவின் வீட்டிற்கு தெரிய வர அவரின் மாமா இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் பிரச்சனை பெரிதாகிறது. மமிதாவை நிவின்பாலியிடமிருந்து பிரித்து வெளிநாட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். இதன்பின் நிவின் பாலி மமிதா பைஜு காதல் என்னவானது? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
பிரேமலு பட இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஒரு கதையாக பார்க்கும் பட்சத்தில் பெரிதாக ஒன்றும் இல்லாதது போல் தான் தோன்றும். ஆனால் சொல்ல வந்த விஷயத்தை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் கலகலப்பாகவும் குடும்பங்கள் கொண்டாடும் காதல் படமாகவும் இத்திரைப்படத்தை கொடுத்து வெற்றி படமாக மாற்றி இருக்கிறார். வழக்கமாக மலையாள படங்கள் என்றாலே முதல் அரை மணி நேரம் அவர்கள் ஸ்டேஜ்ங்குக்கு எடுத்துக் கொள்வார்கள். அது இந்த படத்துக்கும் பொருந்தும். பிறகு வேகம் எடுக்கும் திரைப்படம் இறுதிக்காட்சி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் காதல் ரசம் சொட்ட சொட்ட அழகான கவிதை போல் இறுதியில் ஒரு நிறைவான பீல் குட் காதல் படமாக முடிந்து படத்தை கரை சேர்த்திருக்கிறது.
சுமாரான கதையை தனது சூப்பர் திரைக்கதை மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் இயக்குநர். அடுத்தடுத்த காட்சிகள் தொய்வில்லாமல் வேகமான திரைக்கதை மூலம் நகர்வது படத்திற்கு பெரிய பிளஸ். காதல் கதையோடு கிளை கதைகளையும் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து அதன் மூலம் விறுவிறுப்பான படமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/09/07/488-2026-09-07-15-59-40.jpg)
நிவின் பாலி வயதான தோற்றத்திற்கு ஏற்றார்போல் மிகுந்த முதிர்ச்சியாக அதேசமயம் உடம்பு பெரிதாக தொப்பையும் தொந்தியுமாக இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரம் ஏற்றுக் கொள்ளும் படி இருக்குமா என்ற சந்தேகம் நிலவினாலும் படம் போகப் போக அந்த கதாபாத்திரத்தோடு நம்மை ஒன்றை வைத்து சிறப்பான முறையில் கவர்ந்திருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் நிவின் பாலியின் நடிப்பும் கதாபாத்திரத்தை மெருகேற்றி காட்டி ரசிக்க வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. நாயகி மமிதா பைஜு படத்தின் இன்னொரு நாயகனாகவே மாறி இருக்கிறார். வழக்கம் போல் சின்ன சின்ன முக பாவனைகள் உட்பட தனது எதார்த்தமான அழகான க்யூட்டான நடிப்பை இந்த திரைப்படத்திலும் கொடுத்து பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ட் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் வெற்றி பெற செய்திருக்கிறது.
சின்ன சின்ன காதல் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என அனைத்து காட்சிகளிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். இவரின் துறுதுறு நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளசாக மாறி படத்தை வெற்றி பெற செய்ய உதவியிருக்கிறது. நிவின் பாலியின் தம்பியாக வரும் சங்கீத் பிரதாப் படத்தின் இன்னொரு நாயகனாகவே வளம் வந்திருக்கிறார். இவருக்கென்று தனி ட்ராக்கில் ஒரு கதை செல்கிறது. அதே சமயம் படத்தோடும் அந்த கதாபாத்திரம் ஒன்றி வருவதும் கூடுதல் சிறப்பு. தனக்கு கொடுத்த வேலையை மிக மிக சிறப்பாக செய்து காமெடிக்கு கை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்த உதவியிருக்கிறார். இவரின் சிறப்பான பங்களிப்பு படத்துடன் நன்றாக ஒன்றி இருக்கிறது. மற்றபடி மமிதாவை ஒருதலையாக காதலிக்கும் நபர் மற்றும் நிவின் பாலி நண்பர்கள் மற்றும் நாயகியின் நண்பிகள் மற்றும் நாயகியின் மாமா உட்பட பலர் அவரவர் வேலையை இந்த திரைப்படத்தில் மிக மிக சிறப்பாக செய்து ஒவ்வொரு காட்சியையும் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் ரசிக்கும்படி அமைய கடுமையாக உழைத்து ரசிக்க வைத்திருக்கின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/09/07/486-2026-09-07-15-58-27.jpg)
விஷ்ணு விஜய் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. காதல் காட்சிகளுக்கும் காமெடி காட்சிகளுக்கும் சிறப்பான முறையில் இசை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜ்மல் சாபு ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக அழகாக இருக்கிறது. கொடுத்த பட்ஜெட்டை சிறப்பான முறையில் பயன்படுத்தி காட்சிகளை கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறார். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் படி ஒரு அழகான கலகலப்பான அதே சமயம் குடும்பங்கள் கொண்டாடும் காமெடி படமாக இந்த திரைப்படத்தை கொடுத்து வெற்றி நடை போட்டு இருக்கிறார் இயக்குநர் கிரிஷ் ஏடி. அடுத்தடுத்த காட்சிகள் பல இடங்களில் யூகிக்கும்படி இருந்தாலும் அவை எந்த ஒரு பாதகமும் செய்யாமல் படத்துடன் நம்மை ஒன்றை வைத்து முழு என்டர்டெயின்மென்ட் கொடுத்து நம்மை பீல் குட் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறது.
பெத்தலகேம் குடும்ப யூனிட் – காதல் கவிதை!
