‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம், விஜய் சேதுபதி – சாய் பல்லவியை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார். காதலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க லைகா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படம் ‘புரொடக்சன் நம்பர் 23’ எனத் தற்காலிகமாகப் பெயரோடு துவங்கியது. கொல்கத்தாவில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு இப்படத்தின் டைட்டில் அப்டேட் குறித்த வீடியோ வெளியானது. அதில் ‘சி, ம், இ, ல், ஞ், வெ, ல்’ என்ற எழுத்துகள் காட்சிகளின் நடுவே இடம் பெற்றிருந்தது. இதனால் இந்த எழுத்தில் டைட்டில் அடங்கியிருக்குமோ என ‘வெஞ்சி இல்லம்’, ‘இஞ்சி வெல்லம்’ ரசிகர்கள் அவர்களது யூகங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
டைட்டில் வெளியீடு இன்று இருக்கும் என தெரிவித்த படக்குழு அதன்படி சிறு வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. இதில் சாய் பல்லவி பின்னணி குரலில் ‘நீ இஞ்சி நான் வெல்லம்’ எனவும் ‘நான் வெல்லை நீ இஞ்சி’ எனவும் கூறுகிறார். உடனே விஜய் சேதுபதியும் பின்னணி குரலில் ‘இஞ்சி வெல்லம்’ என சொல்லி முடிக்க இருவரும் மழையில் நனைந்தபடி ஒரு புகைப்படம் வருகிறது. பின்பு ‘இஞ்சி வெல்லம்’ என்ற தலைப்பே உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டான 2027-ல் ஜனவரியில் படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
