‘பழையன கழிதல்… புதியன புகுதல்’ – கடத்தல் காரராக மிரட்டும் மம்மூட்டி!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஓம்’. தனுஷின் 55வது படமாக உருவாகி வரும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா மற்றும் மம்மூட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷாவும் இணைந்து நடிக்கின்றார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். 

இப்படம் அக்டோபர் 16ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தள்ளிப் போகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லு போஸ்டர் மற்றும் அதன் கிளிம்ஸ் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த கிளிம்ஸில் திருவண்ணாமலைக்கு அருகே மரம் வெட்டும் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் என்கவுண்டர் செய்வது போலவும் அவர்களை தனுஷ் வந்து காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படம் நிறைய உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட ஒரு கதை என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியிருந்தார். இதையடுத்து படத்தின் முதல் பாடலான ‘அலாகா லோவா( Alaakaa Loova)’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் இப்படத்தின் மம்மூட்டியின் கதாபாத்திர அறிமுக வீடியோ அவரது பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அபுதாபியில் இருக்கும் தேசியக் கட்டுப்பாட்டு ஆணையம் தேசியளவில் குற்றப் பிரிவை சேர்ந்த ஒருவருக்கு லுக் அவுட் நோட்டிஸ் விடுக்கிறது. பின்பு அவர் சியா என்கிற பர்மா கார்த்திகேயன் எனத் தெரிய வர அவர் தான் மம்மூட்டி என காட்சிகள் விரிகிறது. பின்பு‘பழையன கழிதல்… புதியன புகுதல்’ என்ற வசனத்துடன் மம்மூட்டி எண்ட்ரி கொடுக்க போலீஸே அவருக்கு மரியாதை வைக்கின்றனர். இடையில் மம்மூட்டி தனது மனைவியின் ஃபோட்டோவை சோகத்துடன் பார்க்கும் காட்சிகள் வருகிறது. இதனால் மனைவி மறைவிற்கு பிறகு போலீஸாக இருந்து கடத்தல் காரராக மாறுகிறாரோ என்ற யூகத்தை இந்த முன்னோட்டம் கிளப்புகிறது.

தொடர்ந்து அவர் கதாபாத்திரத்தை விளக்கும் வகையில் ‘கடத்தல் காரன் தானே அவ்ளோ தங்கமான கேரக்டரெல்லாம் கிடையாது. செப்பு கலந்த 916 தங்கம்னு வேணா சொல்லலாம்’ என அவரே வசனம் பேசுகிறார். இறுதியில் அவருடன் தனுஷ் வருகிறார். இதனால் மம்மூட்டி கேங்கில் தான் தனுஷ் இருப்பதாக தெரிகிறது. இத்துடன் முன்னோட்டம் முடிய படம் ஏற்கனவே அறிவித்தபடி அக்டோபர் 16 என்பதை உறுதி செய்துள்ளது. 

Source link