தி.மு.க-வைச் சேர்ந்த மூத்த தலைவரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, கே.என்.நேரு 2021 முதல் 2025 வரை நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வழங்கப்பட்ட அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்து, “பார்ட்டி பண்ட்” (கட்சி நிதி) என்ற பெயரில் பெரும்தொகை லஞ்சமாகப் பெறப்பட்டதாக செப்டம்பர் 4-ம் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணியும் குற்றச்சாட்டுகளும்:
அமலாக்கத்துறை (இ.டி) 2025 டிசம்பர் 3-ம் தேதி சமர்ப்பித்த 258 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையின் அடிப்படையில், மாநில அரசின் அனுமதியோடு லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையில், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நபர்கள் இணைந்து முன்கூட்டியே திட்டமிட்டு, தாங்கள் விரும்பிய ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கியதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கே.என்.நேரு தவிர்த்து, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், நேருவின் நெருங்கிய உதவியாளர் கவி பிரசாத், டி.வி.எச் குழுமத்தைச் சேர்ந்த டி.ரமேஷ், டி.பிரபு, முன்னாள் பெண் நகரமைப்பு அலுவலர் சசிப்ரியா, முன்னாள் மண்டல பொறியாளர்கள் ஜி.பாலச்சந்திரன், ஜி.முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எஸ்.சுதர்சனம், ஜே.ஜே.எபினேசர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘பார்ட்டி பண்ட்’ என்ற பெயரில் 10% லஞ்சம்:
அரசு ஒப்பந்தங்களின் மதிப்பில் 7.5% முதல் 10% வரை “கட்சி நிதி” என்ற பெயரில் லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேருவின் உதவியாளர் கவி பிரசாத், உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, வரவிருக்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே பெற்றுள்ளார். அந்தத் தகவல்களை வைத்து, முன்கூட்டியே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒப்பந்தங்களை வழங்கியது அம்பலமாகியுள்ளது.
வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆதாரங்கள்:
அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கைபேசி வாட்ஸ்அப் உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் கணக்குத் தாள்கள் முக்கிய ஆதாரங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன:
மாதவரம் திட்டம்: 2021 செப்டம்பரில், மாதவரம் பூஸ்டர் பராமரிப்பு ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே ‘சி அண்ட் டி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது வாட்ஸ்அப் அரட்டைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் திட்டம்: சென்னை ஆர்கே நகர் முன்னாள் எம்.எல்.ஏ ஜே.ஜே.எபினேசர் சம்பந்தப்பட்ட ஜூலை 2024 வாட்ஸ்அப் பதிவில், ரூ.525.31 லட்சம் மதிப்புள்ள மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.55.15 லட்சம் ‘கட்சி நிதி’ என கணக்கிடப்பட்டு, ஆகஸ்ட் 9-ல் டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே ஜூலை 30-ல் ஒப்பந்ததாரர் கே.சதீஷ்குமாருக்குப் பணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள்: திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட நகராட்சிகளின் திட்டங்களிலும் 10% லஞ்சப் பணம் பெறப்பட்டு ‘திருப்பூர் ஆர்.இ’ கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கே.என்.மணிவண்ணனின் போனில் இருந்து பெறப்பட்ட புகைப்படத்தில் ரூ.1,198.20 லட்சம் வசூலிக்கப்பட்டு, ரூ.1,166.90 லட்சம் விநியோகம் செய்யப்பட்டதற்கான பட்டியல்கள் கிடைத்துள்ளன. பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்), இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த எஃப்.ஐ.ஆர் சென்னை முதன்மைச் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
