படத்தின் டைட்டில் பார்த்த உடனேயே இது ஏதோ ஏ சர்டிபிகேட் திரைப்படம் என்று தோன்ற வைக்கும் அளவிற்கு இருக்கும். ஆனால் படமும் கதை அமைப்போ அந்த வகையில் இருக்கிறதா இல்லையா என்பது உள் சென்று பார்த்தால் தெரியும். அப்படி உள் சென்று பார்க்கும் பொழுது அவை நம்மை ரசிக்க வைத்ததா, இல்லையா?
நாயகன் ரிஷிகாந்த் காதல் தோல்வியால் அவதிப்படுகிறார். துபாயிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் அவர் வந்த இடத்தில் வந்த அன்றே அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. இதற்கிடையே சிறை பட புகழ் அனிஷ்மா, ரிஷிகாந்துக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்படுகிறார். அவருக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை. எப்படியாவது திருமணத்திலிருந்து தப்பித்து ஓடி தன் காதலனுடன் இணைந்து விட வேண்டும் என பிளான் போடுகிறார். அனிஷ்மாவின் காதலனும் திருமணத்தை நிறுத்தி நாயகியை கடத்தி செல்ல புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பல தடைகளை மீறி ரிஷிகாந்த்துக்கும் அனிஷ்மாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதன்பிறகு இருவருக்கும் முதல் இரவு ஏற்பாடு செய்ய அந்த முதலிரவில் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் மீதி கதை?
பொதுவாக இப்படியான கதை அமைப்பை எடுத்துக்கொண்டு அதில் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பது என்பது சவாலான ஒரு விஷயம். ஆனால் அந்த விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் என அசால்டாக செய்து கைதட்டல் பெற்று இருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி. ஒரு சிறிய கதையை அதுவும் ஓர் இரவில் நடக்கும் கதையை வைத்துக்கொண்டு மிக மிக விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எந்த ஒரு இடத்திலும் முகம் சுளிக்காத வகையில் மிகவும் லைவாகவும் எதார்த்தமாகவும் இப்படத்தை கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். முதல் பாதி ஆரம்பித்தது முதல் விறுவிறுப்பாக நகர்ந்து செல்லும் படம் இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்து பின்பு மீண்டும் வேகமெடுத்து இறுதி கட்டத்தில் கலகலப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் முடிந்து பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல குடும்பம் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறது.
படத்தின் டைட்டிலை பார்த்த பிறகு இது ஏதோ ஏ படம் என்று நினைக்க வேண்டாம். அது போல் இந்த படத்தில் எந்த ஒரு காட்சியும் இல்லை. ஆனால் அதைத் தாண்டி மிகவும் சுவாரஸ்யமான காட்சிகள் பல இருக்கின்றன. அதுவே இந்த படத்திற்கு பெரிய பிளஸ் ஆக மாறி படத்துடன் நம்மை ஒன்ற வைத்து ரசிக்க வைத்திருக்கிறது. இயக்குர் ராஜா கருப்பசாமி எந்த ஒரு இடத்திலும் கலகலப்பு குறையாத வகையில் சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பாகவும் அவர் மீது கவனம் ஏற்படவும் வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல புதுமுக இயக்குநர் கிடைத்திருக்கிறார். குறிப்பாக படத்தின் வசனம் கூடுதல் சிறப்பு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/08/22/196-2026-08-22-12-30-31.jpg)
நாயகன் ரிஷிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி அனிஷ்மா வழக்கம்போல் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகள் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புகள் மூலம் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அவரின் காதலனாக வரும் இயக்குநர் ராஜா கருப்பசாமி மிக மிக எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இயக்கம் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சேத்தன் சமீபகாலமாக இந்த மாதிரியான சிறிய பட்ஜெட் படங்களில் கோலோச்சி வருகிறார். தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து வருகிறார். அதையையே இந்த படத்திலும் செய்து கவனம் பெற்று இருக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் சிறப்பான பங்களிப்பு கொடுத்திருக்கிறார். ரிஷிகாந்த் மாமாவாக வரும் அப்துல் லீ நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பான பங்களிப்பு கொடுத்து கவர்ந்திருக்கிறார். நாயகனின் அப்பாவாக வரும் ஏ வெங்கடேஷ் சாப்டான அப்பாவாக நடித்து கவர்ந்திருக்கிறார். மற்றபடி உடனடித்த அத்தனை நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/08/22/198-2026-08-22-12-30-42.jpg)
சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக நேர்த்தியாக இருக்கிறது. கதைக்கு என்ன தேவையோ அதற்கான ஒளிப்பதிவை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். குறிப்பாக படத்தின் ஆரம்ப கட்டத்தில் வரும் சிங்கிள் ஷாட் காட்சி மிக மிக சிறப்பாகவும் அதேசமயம் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. பரத் சங்கர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பதட்டமான காமெடி கலந்து காட்சிகளில் மிருதங்கத்தை பல இடங்களில் வாசிக்க வைத்து கவர்ந்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் மண் மணம் மாறாமல் அந்த மண்ணுக்கு ஏற்ற வசன உச்சரிப்பும் அதை சிறப்பாக கையாண்ட கதை மாந்தர்களும் அதற்கு உயிர் ஊட்டிய நடிகர்களும் அவர்களுக்கு பக்கபலமாக அமைந்த திரைக்கதையும் ஒரு ஹோல்சம் குடும்ப படமாக அமைந்து அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்திருக்கிறது.
மொத ராத்திரி – 18+ இல்லை!
