புதுடில்லி: இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த பிற பொருட்களை சுங்கத் துறையில் இருந்து விடுவிப்பதற்கு முன், அவற்றுக்கான உரிமங்கள், அனுமதிகள் மற்றும் பதிவு சான்றிதழ்களை நேரடியாக சரிபார்க்க, அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சுங்கத்தின் இடர் மேலாண்மை அமைப்பு வாயிலாக ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு, விரைவாக அனுமதிக்கப்படும் ‘பில் ஆப் என்ட்ரி’ ஆவணங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என, சி.பி.ஐ.சி., எனப்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு, இறக்குமதிக்கான அரசின் டிஜிட்டல் ஒற்றைச்சாளர அமைப்பான ‘ஸ்விப்ட் 2.0’ல் காணப்படும் குறைபாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பில், இறக்குமதியாளர்கள் பல்வேறு அரசு துறைகளிடம் தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்காமல், ஒரே மின்னணு நடைமுறை வாயிலாக தகவல்களை அளித்து தேவையான அனுமதிகளை பெற முடியும்.
ஆனால், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பான சி.டி.எஸ்.சி.ஓ.,வின் ஆவணங்கள், சுங்கத் துறையின் ஸ்விப்ட் 2.0 மின்னணு அமைப்பில் இன்னும் முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லை. இதனால், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வெளியே எடுத்துச்செல்ல அனுமதிக்கும் இறுதி ஒப்புதலை வழங்குவதற்கு முன், சுங்க அதிகாரிகளே ஆவணங்களை நேரடியாக சரிபார்க்க வேண்டும் என சி.பி.ஐ.சி., உத்தரவிட்டுள்ளது. இதற்காகவே, ஏழு வகை பொருட்கள் அடங்கிய புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
7 வகை பொருட்கள்!
* நேரடி சரிபார்ப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ள பொருட்கள்
* அழகு சாதன பொருட்கள்
* மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மருந்துகள்
* தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்
* குறைந்த அளவில் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட புதிய மருந்துகள்
* மருத்துவ சாதனங்கள்
* உடலுக்கு வெளியே மேற்கொள்ளப்படும் நோய் கண்டறியும் பரிசோதனை கருவிகள்
* மருத்துவ சாதனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள்.
