போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டிவி தொகுப்பாளினிக்கு 'துாக்கு'

கெய்ரோ:எகிப்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில், பிரபல ‘டிவி’ பெண் தொகுப்பாளர் உட்பட, 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வட ஆப்ரிக்க நாடான எகிப்தில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், சாரா கலீபா, 39, என்பவர் பாதுகாப்பு மற்றும் குற்றங்கள் தொடர்பான, ‘மிஷன் இம்பாசிபிள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இவர், அழகு அறுவை சிகிச்சை மையத்தையும், நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

சாரா சிலருடன் சேர்ந்து வெளிநாட்டிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, போதைப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சோதனையில், சாராவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து, 750 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எகிப்தில் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, சாரா கலீபா உட்பட, 12 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் போது, ”தன் வாழ்நாளில் ஒரு சிகரெட் கூட புகைத்தது கிடையாது,” என, சாரா கண்ணீருடன் நீதிபதியிடம் முறையிட்டார்.

Source link