இந்த நிலையில் இன்று அவை கூடியதும் எதிர்க்கட்சி கொறடாவும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, சட்ட ஒழுங்கு குறித்து முதல்வர் விஜயின் பதிலுரை குறித்து விமர்சனம் செய்தார். சர்க்காரியா கமிஷன் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், மிசா குறித்து பேசும் போது மாறனின் பெயர் குறிப்பிட்டு பேசியது அவை மீறிய செயல் என்றும் குறிப்பிட்ட எ.வ.வேலு, காவல்துறை தவிர முதல்வர் பேசிய ஆதாரமில்லாமலும், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிற அத்தனை குறிப்புகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திமுக சொல்வதை நாம் கேட்க வேண்டும், ஆனால் நாங்கள் பேசுவதை அவர்கள் கேட்காமல் அவையில் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார்கள், இது தான் அவர்களுடைய திட்டம்” என்று கூறிய போது திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதற்கு அமைச்சர் ஆதவ், “அப்போ நாங்களும் எழுந்திருக்கலாமா?” என்று சொன்னவுடன் தவெக எம்.எல்.ஏக்கள் எழுந்தனர். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தவெக எம்.எல்.ஏக்களை அமருமாறு அமைச்சரிடம் கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நாம் பேசினாலே, பேச விடாமல் திமுக பயந்து எழுந்து நின்று விடுவார்கள். முதல்வர் சொன்ன வரலாற்றுப் பதிவுகள் இதே அவையில் அனைத்து உறுப்பினர்களாலும் பேசப்பட்டவை. சர்க்காரியா கமிஷனில் திமுக ஊழல் என கொடுத்ததே கம்யூனிஸ்ட் கட்சியுடைய தலைவர் கல்யாண சுந்தரம் தான். சர்க்காரியா கமிஷனை உருவாக்குவதற்கு காரணம் கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட் தோழர்கள் ஊழல் என்றால் எப்போதும் எதிர்த்து நிற்பார்கள். முதல்வரின் பதிவை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்” என்று பேசினார். அவர் பேச பேச திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
