2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்; அதிமுகவின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமாக ஏழு தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தனித் தொகுதிக்கும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. 

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் என்பவரும், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சத்யபாமா என்பவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், இருவரும்  தங்களுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தற்போது, இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் மாதம் 6 தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்டு, செப்டம்பர் 16 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்.17 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் இன்று (8.9.2026) முதல் 10.9.2026 வியாழக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10.9.2026 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

Source link