எதிரிகளின் ரேடார்களை முடக்கும் புதிய ஜாமர்; இந்திய ராணுவத்திற்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கிய மத்திய அரசு

எழுதியவர்: அம்ரிதா நாயக் தத்தா

இந்தியாவின் முக்கிய ராணுவக் கொள்முதல் அமைப்பான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC), முப்படைகளுக்காக சுமார் ரூ.1,10,000 கோடி மதிப்பிலான முக்கிய ராணுவக் கொள்முதல்களுக்கு திங்கள்கிழமை பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க

ரசாயனம், உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுஆயுத உளவு வாகனங்கள், அதிக நகர்வு திறன் கொண்ட வாகனங்கள், மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், அருத்ரா ரேடார்கள், மெரைன் கேஸ் டர்பைன்கள் மற்றும் தரைவழி பன்முக ஜாமர்கள் போன்றவை ஒப்புதல் அளிக்கப்பட்ட கொள்முதல்களில் அடங்கும்.

இந்திய ராணுவத்திற்காக சி.பி.ஆர்.என் (CBRN) உளவு வாகனங்கள், அதிக நகர்வு திறன் கொண்ட வாகனங்கள், சுய- இயக்க இயந்திர கண்ணிவெடி வைக்கும் வாகனங்கள், மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், டிரால் டேங்கர்கள் மற்றும் சர்வத்ரா பாலம் அமைக்கும் அமைப்புகளைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பை பாதுகாப்புப் கொள்முதல் கவுன்சில் வழங்கியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட கொள்முதல்களுக்கு முதற்கட்ட நிர்வாக ஒப்புதலான ‘தேவைக்கான ஏற்பு’ வழங்குவது என்பது பாதுகாப்புப் கொள்முதல் நடைமுறையின் முதல் படியாகும். இருப்பினும், ஏ.ஓ.என் (AoN) பெறுவது எப்போதும் இறுதி ஆர்டருக்கு வழிவகுக்கும் என்று கூற முடியாது. சி.பி.ஆர்.என் உளவு வாகனங்கள், அணு, உயிரியல் மற்றும் ரசாயன பொருட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறியவும், அடையாளம் காணவும், கண்காணிக்கவும் மற்றும் குறியிடவும் ஏற்றது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஹெச்.எம்.வி வாகனங்கள் கடினமான நிலப்பரப்புகளில் செயல்பாட்டுத் திறன்கள், தளவாட ஆதரவு மற்றும் நகர்வுத் திறனை அதிகரிக்கும். அதே நேரத்தில் எம்.எம்.எல் வாகனங்கள் கடினமான நிலப்பரப்புகளில் விரைவாக கண்ணிவெடிகளை வைப்பதற்கான செயல்பாட்டுத் திறனை எட்ட உதவும்.

மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏ.எல்.எச் ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்காக அனைத்து நிலப்பரப்புகளிலும் சிக்கலான பணிகளைச் செய்யும் என்றும், டிரால் டேங்கர்கள் மற்றும் பாலம் அமைக்கும் அமைப்புகள் பல்வேறு நிலப்பரப்புகளில் செயல்படும் போது படைப்பிரிவுகளுக்கு ஒருங்கிணைந்த பாதைகளை அமைக்கப் பயன்படும் என்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்காக அருத்ரா ரேடார்கள் கொள்முதல் செய்யவும், மெரைன் கேஸ் டர்பைன் (MGT) வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தொடர் கொள்முதலுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அருத்ரா ரேடார் என்பது இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ (DRDO) அமைப்பால் உருவாக்கப்பட்டு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்  நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உள்நாட்டு 4டி பன்முக கட்ட வரிசை ரேடார் ஆகும். 

இது வான்வழி இலக்குகளைக் கண்காணித்தல், கண்டறிதல் மற்றும் பின்தொடர்வதற்கு கிடைமட்டம் மற்றும் செங்குத்து ஆகிய இரு திசைகளிலும் மின்னணு ஸ்டீயரிங் திறனைக் கொண்டுள்ளது. இந்த அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள ‘நண்பனா அல்லது எதிரியா’ என்பதைக் கண்டறியும் அமைப்பு மூலம் இலக்குகளை அடையாளம் காண முடியும். இதன் வெற்றிகரமான சோதனைகள் ஏற்கனவே இந்திய விமானப்படையால் நடத்தப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை படி, அருத்ரா ரேடாரானது பல்வேறு கடற்படை விமான நிலையங்களில் தற்போதுள்ள வான்வழி பாதை கண்காணிப்பு ரேடார்களுக்குப் பதிலாக பொருத்தப்படும். போர்க்கப்பல்களின் உந்துவிசை அமைப்பான ‘மெரைன் கேஸ் டர்பைன்’, வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைக்கும்.

இந்திய போர்க்கப்பல்களில் பாரம்பரியமாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெரைன் கேஸ் டர்பைன் ஜெனரேட்டர்களே பொருத்தப்பட்டிருந்தன. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக, பராமரிப்பிற்கான உதிரி பாகங்கள் இறக்குமதியை குறைக்க கேஸ் டர்பைன் பாகங்கள் மற்றும் கம்ப்ரசர்களை உள்நாட்டிலேயே தயாரிக்கக் கடற்படை பணியாற்றி வருகிறது, மேலும் இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய கடற்படையின் கொல்கத்தா – கிளாஸ் போர்க்கப்பல்களில் மின் உற்பத்தி செய்வதற்காக, சுமார் ரூ.425 கோடி செலவில் 12 செட் 1.25 மெகாவாட் மெரைன் கேஸ் டர்பைன் ஜெனரேட்டர்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது. இந்த மெரைன் கேஸ் டர்பைன் ஜெனரேட்டர்கள் குறைந்தபட்சம் 60% உள்நாட்டு பொருட்களை கொண்டிருக்கும்.

விமானப்படையைப் பொறுத்தவரை, போர் விமானங்கள், சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் போர்த் திறனை உயர்த்துவதற்கான பல்வேறு முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. தரைவழி பன்முக ஜாமர் கொள்முதல் செய்யவும், பாதுகாப்புப் படைகளுக்கான பாதுகாப்பான அணுகல் கார்டு அமைப்பை நிறுவுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜி.பி.எம்.பி.ஜே (GBMPJ) எதிரிகளின் ரேடார்களுக்கு எதிராக சிறப்பான ஜாமிங் சேவையை வழங்கும், மேலும் ‘டெஃப்சாக்’ (DEFSAC) தற்போதுள்ள காகித அடிப்படையிலான அடையாள அட்டைகளுக்கு பதிலாக ரேடியோ அதிர்வெண் அடிப்படையிலான ஸ்மார்ட் கார்டு அமைப்பை கொண்டுவரும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. வழங்கப்பட்ட மொத்த ஒப்புதல்களில், சுமார் 98% கொள்முதல்கள் இந்தியத் தொழில்துறையிலிருந்தே மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link