கடந்த 2022ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. இந்த பணியில் விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், முனீஸ்வரன், சின்னக்குட்டி ஆகிய 3 நபர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியுடன் முனீஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி பின் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஆசை வார்த்தையாகப் பேசி அந்த மாணவியை முனீஸ்வரன் தனியாக அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு முனீஸ்வரன், முருகேசன், சின்னக்குட்டி ஆகிய 3 பேரும் அந்த மாணவியை வலுக்கட்டாயமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் அளித்ததன் பேரில் திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட அந்த 3 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று (08-09-26) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சுரேஷ்குமார் முன்பு வந்த இந்த வழக்கில், சின்னகுட்டிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், முருகேசனுக்கு 20 ஆண்டுகளும் முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
