சீனாவில் உள்ள ஹாங்காங்கின் குவாய் சங் பகுதியில் ’வா ஜெர்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று மதியம் பெண் ஒருவர் ’சாடே பீப் நூடுல்ஸ், ஹாம் ஆம்லெட் உள்ளிட்டவற்றை பார்சல் வாங்கியுள்ளார்.
பின்பு, அவர் தனது அலுவலகத்திற்குச் சென்று உணவு பார்சலைத் திறந்து பார்த்தபோது, நூடுல்ஸ் மற்றும் சாஸ்க்கு நடுவே புதிதாகப் பிறந்த எலிக்குட்டி ஒன்று உயிருடன் கை, கால்களை அசைத்தபடி துடித்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த அதிர்ச்சிகரமான காட்சியை அவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அது உடனடியாக வைரலாகி இணையவாசி கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், சம்பவம் குறித்து அப்பெண் உடனடியாக ஹாங்காங்கின் உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையிடம் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தியதில், அங்குச் சுகாதாரக் குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் உணவக உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், உணவு தயாரிப்பு, பேக்கிங் அல்லது டெலிவரி ஆகியவற்றில் எந்தக் கட்டத்தில் இந்த எலிக்குட்டி பார்சலுக்குள் நுழைந்தது என்பது குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
