மும்பை அருகே சரக்கு லாரி- ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் உடல் நசுங்கி பலி

மும்பை: மஹாராஷ்டிராவில் சரக்கு லாரியும்,ஜீப்பும் மோதிக் கொண்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோண்டியா நகரத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநில நெடுஞ்சாலையில் நாக்ரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் அருகே இன்று (செப்.8) நண்பகல் 12.30 மணியளவில் சரக்கு லாரியும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. விபத்தில் ஜீப்பில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தை அறிந்த ஊர்மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணிகளில் இறங்கினர். விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்களை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

முதல்கட்ட விசாரணையில், பாலகாட் மாவட்டம், கிர்னாபூர், லஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஹைதராபாத்துக்கு வேலைக்காக ஜீப்பில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. விபத்து தொடர்பாக லாரி டிரைவர் மொஹ்சின்கான் என்பவரை கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து நண்பகலில் நிகழ்ந்து இருந்தாலும், நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Source link