குறுவை சாகுபடி இழப்பை ஈடுசெய்ய சம்பா சாகுபடிக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என்றும், நகர்ப்புற மேம்பாடு என்ற பெயரில் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் புதிய சட்ட மசோதாவைக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் நடைபெற்ற சங்கத்தின் மாநிலக் குழு கூட்டத்தில் காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குணசேகரன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி சங்கத்தின் அமைப்பியல்பான வேலைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் உலகநாதன், மாநில துணைச் செயலாளர்கள் த.இந்திரஜித், கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இரா.முல்லை (கிருஷ்ணகிரி), பழனி (சிவகங்கை), காமராஜ் (தூத்துக்குடி), லெனின் குமார் (விழுப்புரம்), கலியமூர்த்தி மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் திருச்சி பழனிச்சாமி, தர்மபுரி சின்னச்சாமி, தமிழ்ச்செல்வி (கிருஷ்ணகிரி), வெங்கடாஜலம் (சேலம்), பூபேஷ், விழுப்புரம் மாசிலாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் 1: ஒரு போக சம்பா நெல் சாகுபடியைப் பாதுகாக்க சிறப்புத் திட்டம்
சம்பா சாகுபடிப் பாதுகாப்பு: சுமார் 1.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடி நீரன்றி கருகி விவசாயிகள் முழு வருமானத்தையும் இழந்துள்ள நிலையில், 16 லட்சம் ஏக்கரில் நடைபெறவுள்ள ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடியைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடி சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
காவிரி நீர் உரிமை: கர்நாடக அரசு வழங்க வேண்டிய நிலுவை நீரையும், உரிய அளவு பங்கீட்டு நீரையும் பெற்றிடத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர் சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டும்.
மேட்டூர் அணை நீர் திறப்பு மற்றும் கண்காணிப்பு: வரும் நவம்பர் 15 முதல் மேட்டூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீரைத் திறந்து விட்டு முறைப்பாசனம் செய்ய வேண்டும். நீர் கடைமடை வரை செல்வதை உறுதிசெய்ய சிறப்புக் கரைகாவலர்களை நியமித்து நீர்வளத் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
50% மானியக் கோரிக்கை:
குறுகிய மற்றும் நடுத்தர கால நெல் விதைகளுக்கு 50% மானியம்.
இரசாயன உரங்கள் மற்றும் இடுபொருட்களுக்கு 50% மானியம்.
உழவு, கை நடவு மற்றும் இயந்திர நடவுப் பணிகளுக்கு 50% மானியத் தொகை.
இச்சிறப்பு ஊக்கத்திட்டங்களுக்குத் தேவையான நிதியை அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்து, உரிய தொழில்நுட்ப அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடு: சம்பா நெல் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதைத் தவிர்த்து, அரசின் பொதுத்துறைத் திட்டமாகவே நடைமுறைப்படுத்த வேண்டும்.
தீர்மானம் 2: நகர்ப்புற வேளாண் நில அபகரிப்பு மசோதாவிற்கு கண்டனம்; வழக்குகள் வாபஸ் பெற்றதற்கு வரவேற்பு
சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரால் 02.09.2026 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டுச் சட்டத் திருத்த மசோதாவிற்குச் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. நகர்ப்புற வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களைக் கையகப்படுத்த நகர ஊரமைப்பு இயக்குநருக்கு அதிகாரம் அளிப்பதும், உள்ளாட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரத்தைப் பறிப்பதும் வேளாண்மையை அழிக்கும் செயலாகும். 2023-ல் கொண்டுவரப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்டத்தைப் போல, தற்போதைய த.வெ.க. அரசும் நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. உள்ளாட்சி ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் இந்த மசோதாவை அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து – வரவேற்பு: பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான நிலுவை வழக்குகளை ரத்து செய்வதாகத் தமிழக முதல்வர் அறிவித்திருப்பதைச் சங்கம் வரவேற்கிறது.
காவல்துறை நடைமுறைகளில் மாற்றம்: அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்கும் விவசாயிகள் மீது அவர்களுக்குத் தெரியாமலேயே வழக்குப்பதிவு செய்து, வாய்தாக்களை நீண்ட காலம் காவல் நிலையத்திலேயே வைக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட போராட்டங்களுக்கு வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்றும், பிற போராட்டங்களுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டால் உடனடியாகச் சம்மன் அனுப்பப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட வேண்டும்.” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி
