3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவக்கம்; உக்ரைனில் பத்திரிகை அலுவலகத்தில் ரஷ்யா தாக்குதல்

கீவ்: உக்ரைனில் 3 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தாக்குதலை ரஷ்யா துவங்கி உள்ளது; பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கப் பிரதிநிதிகளின் குழுக்கள் வருகைக்காக அறிவிக்கப்பட்ட மூன்று நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதலை துவங்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்; 10 பேர் காயம் அடைந்தனர். பல அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. உக்ரைனில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: இன்று, ரஷ்யா ஊடகங்களையும் பத்திரிகையாளர்களையும் தாக்கியுள்ளது. யுனைடெட் நியூஸ் டெலிதோனின் ஒரு பகுதியாக இருக்கும் ‘வி ஆர் உக்ரைன்’ தொலைக்காட்சி சேனலின் கட்டடத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் நேரலையில் இருந்தபோது, ​​பட்டப்பகலில் இது நிகழ்ந்துள்ளது.

கட்டடம் பகுதியளவு சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்தில் தேவையான அனைத்து சேவைகளும் செயல்பட்டு வருகின்றன. மாநில அவசரகால சேவைப் பணியாளர்கள் ஏற்கனவே தீயை அணைத்துவிட்டனர். தற்போதைய நிலவரப்படி, ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும். ஊடகங்களுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல், சீரழிவில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கின்றன.

மேலும் ஐரோப்பாவும் உலகமும் நிச்சயமாக இதற்குப் பதிலளிக்க வேண்டும். உக்ரைன் மற்றும் உக்ரைனியர்களுக்கு எதிரான ஒரு தாக்குதல் சம்பவத்திற்கு கூட தண்டிக்கப்படாமல் விடப்படக்கூடாது. ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும், இது கூட்டு முயற்சிகள் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Source link