எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை: முதல்வர் விஜய்

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கையில் என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நேற்று( செப்.,07) முதல்வர் விஜய் பதிலளித்தார்.

அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய விஜய், சர்க்காரியா கமிஷன் குறித்து குறிப்பிட்டார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்த போது மிசாவில் என்ன நடந்தது என்று தெரியும் எனக்குறிப்பிட்டு, தனது முகத்தில் கையை வைத்து ஒரு சைகை செய்தார். இது சர்ச்சையானது. உருவகேலி செய்யும் வகையில் அமைந்ததா என்ற விவாதம் எழுந்தது. எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜயை விமர்சித்து வந்தன.

இந்நிலையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையில் என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை; தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

Source link