சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல்; பற்றி எரிந்த எண்ணெய் ஆலைகள்

ரியாத்: ஹவுதி பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், சவுதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி மற்றும் எண்ணெய் ஆலைகள் பற்றி எரிந்தன.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான போர், மேற்காசியா முழுதும் விரிவடைந்துள்ளது. ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஈரானுக்கு ஆதரவாக இந்தப் போரில் ஈடுபட்டுள்ளது. ஏமன் அரசுப் படைகளுக்கு சவுதி அரேபியா ஆதரவு உள்ளது. அதனால், சவுதி அரேபியா மீது ஹவுதி பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை, சவுதி அரேபியாவின் அப்ஹா, கமிஸ் முஷைத், ஜிசான் மற்றும் நஜ்ரான் ஆகிய நான்கு மாகாணங்களில் உள்ள பொருளாதார மையங்களை குறிவைத்து ஹவுதி பயங்கரவாதிகள் வான்வழி தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலில் சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் ஆலைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், 73 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. தாக்குதல்களை அடுத்து, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதியில், பல முக்கிய எரிசக்தி மையங்களின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் மேற்காசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தை உட்பட 7 பேர் பலி!

ஏமன் நாட்டில் ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஜவ்ப் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்தே சவுதி அரேபியா மீது தாக்குதல்கள் நடத்தியதாக ஹவுதி பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

Source link