பெங்களூரு: கர்நாடக மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் நடத்திய சோதனையில் 1.38 கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மற்றும் தவறான தகவல்களை கொண்ட உணவுப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடக்கவிருந்த பெப்டைட் பார்ட்டி எனும் நிகழ்ச்சி தொடர்பான ஆவணங்கள் அடிப்படையில், அம்மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள், தேவனஹள்ளி மற்றும் அனேகல் பகுதியில் உள்ள அமேசான் உணவுப்பொருட்கள் சேமிப்பு கிடங்கிலும், ஹோஸ்கோடேவில் உள்ள ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உணவுப்பொருட்கள் சேமிப்பு கிடங்குகளிலும் சோதனை நடத்தினர்.
ஆன்லைன் வாயிலாக விற்பனை ஆன பொருட்களில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் காலாவதி ஆகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
அதில், அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 56 லட்ச ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த உணவுப்பொருட்களில் காலாவதி ஆகும் தேதி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் அடங்கிய விவரங்கள் ஏதும் இல்லை.
தேவனஹள்ளியில் லேபிள் தொடர்பான விதிகளை பின்பற்றாத 14 லட்ச ரூபாய் மதிப்பு உணவுப்பொருட்களும், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இத்துடன் 2.45 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல் ஆனது. இவை உரிய லைசென்ஸ் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்தது.
அனேகல் பகுதியில் லேபிள் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த 19 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களும், 13 லட்ச ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவுப்பொருட்களும், லைசென்ஸ் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்த 1.57 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்களும் பறிமுதல் ஆனது.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்திற்கு சொந்தமாக ஹோஸ்கோடேவில் உள்ள இடத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவுப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாததாலும், அசுத்தமாக இருந்ததாலும் அந்த இடம் சீல் வைக்கப்பட்டது.
மேலும், ஆய்வின் போது காலாவதியான மற்றும் லேபிள் விதிகளை பின்பற்றாத பொருட்கள் 1 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்திடம் விசாரணை நடக்கிறது.
எச்பிஆர் லேஅவுட் பகுதியில் நிறுவனம் ஒன்று பால், தயிர் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி காலாவதி ஆனபிறகு விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
லிங்கராஜபுரம் பகுதியில் காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. குளிர்பானங்கள், சாக்லேட்கள், இனிப்பு, நெய் உள்ளிட்டவை அடங்கிய இந்த பொருட்களின் மதிப்பு 56 லட்ச ரூபாய் ஆகும். மேலும் அந்த இடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
