சென்னை: திமுகவினரால் எனது ரத்த அழுத்தம் ஏறிவிட்டது என்று சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கலகலப்பாக பேசினார்.
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் பேசிய சிலவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக கொறடா எ.வ. வேலு வலியுறுத்தினார். ஆனால் அதை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்க மறுத்தார்.
இதனால் அவையில் திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு திரண்டு முழக்கமிட்டனர். இதையடுத்து, அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது;
ஞாயிற்றுக்கிழமை திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். குறைந்த ரத்த அழுத்தம் என்று கூறி மருத்துவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார். அதை மீறி நம்மை ஆளாக்கி அழகு பார்த்த முதல்வர் உரையை பார்க்க வேண்டும் என நான் இங்கு வந்து அமர்ந்தேன்.
நல்ல வேளையாக அவர்கள் (திமுகவினர் அவையில் நடந்து கொண்டதை குறிப்பிடுகிறார்) நடந்து கொண்ட விதத்தில் மருத்துவர் இல்லாமலேயே எனக்கு சிகிச்சை கிடைத்தது. எனது ரத்த அழுத்தம் எல்லாம் ஏறிவிட்டது. இப்போதும் என் மீது என்ன தவறு இருக்க முடியும் என்று நினைத்து பாருங்கள்.
முதல்வர் பேசியதை நீக்க கோரிக்கை வைத்தார்கள். ஆனால் நீக்கமுடியாது என நான் தெளிவாக கூறிவிட்டேன். விதிகளுக்கு உட்பட்டு ஆதாரத்துடன் தான் முதல்வர் பேசினார்.
மூத்த முன்னாள் அமைச்சர்கள், அவையை எப்படி மாண்புடன் நடத்த முடியும் என்று நன்கு அறிந்தவர்களை கொண்ட கட்சியினர் அவையை நடத்தவிடாமல் தடுத்தால் என்ன செய்ய முடியும்.
இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசினார்.
