பள்ளி மாணவர் மர*ணத்தில் திடீர் திருப்பம் : போலீசார் தீவிர விசாரணை!

மதுரை மாநகர் கூடல் நகர் வானவில் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன். இவர் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இத்தகைய சூழலில் செல்லூர் அருகே உள்ள கண்மாயில் தமிழ்ச்செல்வன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக தமிழ்ச்செல்வனும், அவரது வீட்டின் அருகே வசித்து வந்த 10ஆம் வகுப்பு மாணவியும் நெருக்கமாகப் பழகி வந்ததாகவும், இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

இதனால் மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தமிழ்ச்செல்வனை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்ச் செலவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வலது முழங்கை மற்றும் முட்டியில் சிராய்ப்புக் காயங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பது குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தண்ணீரில் மூழ்கியதால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், நுரையீரலில் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மாணவன் தனது நண்பருடன் வேலைக்குச் சென்ற நிலையில், ஆணையூர் கழிவுநீர் குட்டைக்கு எவ்வாறு சென்றார் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், சடலமாக மீட்கப்பட்டபோது அவர் அணிந்திருந்த சட்டை, பேன்ட், செருப்பு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், மாணவன் காணாமல் போன நாளில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் அவரது தொலைபேசியில் கேட்டதாகவும் கூறப்படுவதால், அந்தத் தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.

எனவே, தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்தில் ஆணவப் படுகொலை நடந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

முன்னதாக மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு அறிக்கையில் அதற்கான அறிகுறிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் வயிற்றில் இருந்த திரவம் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link