விநாயகர் சதுர்த்தி : “ஈரோட்டில் கடும் கட்டுப்பாடுகள்”

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் நிறுவுதல், பாதுகாப்பு மற்றும் கரைப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. முக்கிய வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்: அனுமதிகள்: சிலைகள் வைக்க நில உரிமையாளர்/துறைகளிடம் தடையின்மைச் சான்று (NOC), காவல்துறையிடம் ஒலிபெருக்கி அனுமதி, தீயணைப்புத் துறையிடம் பந்தல் பாதுகாப்புச் சான்று மற்றும் TANGEDCO-விடம் தற்காலிக மின் இணைப்பு அனுமதி பெற வேண்டும்.சுற்றுச்சூழல் விதிமுறைகள்: சுத்தமான களிமண் சிலைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) மற்றும் ரசாயன வண்ணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பந்தல் பாதுகாப்பு: எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள் அருகே சிலைகள் வைக்கக் கூடாது. 24 மணி நேரமும் இரு தன்னார்வலர்கள், மின் இயற்றி (Generator) மற்றும் முதலுதவி வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஒலிபெருக்கி விதி: காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் மட்டுமே அனுமதி. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்குத் தடை; பெட்டி வடிவ ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மத/அரசியல் பேனர்களுக்கு அனுமதியில்லை.

ஊர்வலம் மற்றும் கரைப்பு: சிலைகள் நிறுவப்பட்ட 5 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட வேண்டும். ஊர்வலம் நண்பகல் 12 மணிக்கு முன் தொடங்க வேண்டும். மினி லாரி/டிராக்டர் போன்ற 4 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி; மாட்டு வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை
.
இதர கட்டுப்பாடுகள்: ஊர்வலப் பாதைகளிலும், கரைக்கும் இடங்களிலும் பட்டாசு வெடிக்கத் தடை. கரைப்பதற்கு முன் பூக்கள், துணிகளை அகற்ற வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 கட்டங்களாக நீரின் தரத்தை ஆய்வு செய்யும். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர்  க.சாந்த குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  தேன்மொழி (பொது) மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link