சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு : முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட சபாநாயகர்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் (08.09.2026) நிறைவடைந்தது. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதன்  அடிப்படையில், 2026-27ஆம் நிதியாண்டிற்கான பல்வேறு குழுக்களுக்கு உறுப்பினர்களையும், தலைவர்களையும் நியமித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். அதன்படி, சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக அருள் பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார். 

பொது கணக்குக் குழுவின் தலைவராக சையத் பரூக் பாஷா நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிறுவனங்கள் குழுவின் தலைவராக கல்லானை நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அவை உரிமைக் குழுவின் தலைவராகப் பேரவையின் துணைத் தலைவர் ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அவை உரிமைக் குழுவில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, லட்சுமணன், மார்கண்டேயன் உள்ளிட்டோர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக சார்பில் சிந்து உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவைக்குழுவின் தலைவராக இடதுசாரி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை விதிகள் குழுவின் தலைவராகப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவல் வழி பதவியாக , நியமிக்கப்பட்டுள்ளார். நூலகக் குழுவின் தலைவராக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு, பல்வேறு குழுக்களுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய பணிக்காலம் அடுத்த ஒரு ஆண்டுக்கு இருக்கும். நிர்வாக காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் சபாநாயகர் குழு உறுப்பினர்களை மாற்றி அமைத்து நியமனம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link