தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!

சென்னை: சர்க்காரியா கமிஷன், மிசா கைது, அமலாக்கத்துறை அறிக்கை பற்றி, முதல்வர் விஜய் பேசியதை சபை குறிப்பில் நீக்கக்கோரி, சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபை நேற்று காலை 9:30 மணிக்கு கூடியதும், தி.மு.க., கொறடா எ.வ.வேலு எழுந்து பேசியதாவது: சட்டசபைக்கு என மரபுகள் உள்ளன. அவற்றின்படி, இதுவரை முதல்வர்களாக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஸ்டாலின், பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர், காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளிக்கும் போது, கண்ணியமாகவே பேசியுள்ளனர்.

சட்டசபை விதி, 92ல், நீதி விசாரணையில் இருக்கும் எப்பொருள் குறித்தும் விவாதிக்க இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், விசாரணையில் இருக்கும் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை அறிக்கையை, முதல்வர் விஜய் படித்துள்ளார். இது, சபை மரபை மீறிய செயல்.

சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், தி.மு.க., அரசு மீதான 28 குற்றச்சாட்டுகளுக்கு, எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. நெருக்கடி நிலையை எதிர்த்து, மிசா சட்டத்தில் கைதாகி, ஸ்டாலின் ஓராண்டு சிறையில் இருந்தார்.

மறைந்த தலைவர்கள் கருணாநிதி, மாறன் மீது, முதல்வர் விஜய் குற்றம் சாட்டியிருக்கிறார். எனவே, இது பற்றி முதல்வர் விஜய் பேசியதை, சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு வேலு பேசினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், ”தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மிசா சட்டத்தில் கைதானதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சர்க்காரியா கமிஷனில் கருணாநிதி ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளது.

”கோதுமை கொள்முதல், பூச்சி மருந்து தெளித்ததில், அன்றைய அமைச்சர் தர்மலிங்கம் ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. தேவையில்லாமல் பழைய வரலாற்றை கிளறினால், தி.மு.க., பற்றிய உண்மைகள் வெளிவரும்,” என்றார்.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்; முதல்வர் விஜய் பேச்சை நீக்குமாறு வலியுறுத்தினர்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”நாங்களும் எழுந்து நிற்கலாமா,” என்று கோபமாகக் கேட்டார். அவரை கண்டித்த சபாநாயகர் பிரபாகர், ”அமைச்சர் இப்படி சொல்லக்கூடாது; ஆளுங்கட்சியினருக்கு அதிக பொறுப்பு உள்ளது,” என்றார்.

தொடர்ந்து தி.மு.க.,வினர் கோஷமிட்டுக் கொண்டிருக்க, குறுக்கிட்ட சபாநாயகர் பிரபாகர், ”சர்க்காரியா கமிஷன் பற்றி ஏற்கனவே சட்டசபையில் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது. மிசாவில் ஸ்டாலின் கைதானது, முரசொலி மாறன் பற்றி, சட்டசபையில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.

”பொதுவெளியில் உள்ள அமலாக்கத்துறை அறிக்கை பற்றியே முதல்வர் விஜய் பேசினார். எனவே, அவரது பேச்சை நீக்கத் தேவையில்லை,” என்றார்.

அதை ஏற்காத தி.மு.க.,வினர், ‘முதல்வர் பேச்சை நீக்க வேண்டும்’ என்று கோஷமிட்டனர். சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து, 10 நிமிடத்திற்கு மேலாக உரத்த குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், ”சபாநாயகர் ஒரு தீர்ப்பு வழங்கிய பின், சபையை நடத்த விடாமல் தடுக்கும் தி.மு.க.,வினரை, சட்டசபையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை எச்சரித்த சபாநாயகர், ”ஒரு நிமிடம் அவகாசம் தருகிறேன்; அதற்குள் அமைதியாக அமர்ந்தால், எ.வ.வேலு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச அனுமதி தருகிறேன்,” என்றார்.

அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால் கோபமடைந்த சபாநாயகர், ”சபையின் மாண்பை குலைக்கிற பணிகளில் ஈடுபட பயிற்சி பெற்று வந்திருக்கிறீர்கள். என்னை சூழ்ந்து, சபையை நடத்த விடாமல் தடுக்கும் தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை, சபை காவலர்கள் வெளியேற்ற வேண்டும்,” என, உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை குண்டுக்கட்டாக துாக்கி, சபை காவலர்கள் வெளியேற்றினர்.

பின், சபாநாயகர் கூறியதாவது: கடந்த 6ம் தேதி, குறைந்த ரத்த அழுத்தத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இப்போது, டாக்டர் இல்லாமலேயே எனக்கு சிகிச்சை கிடைத்தது; ரத்த அழுத்தம் ஏறி விட்டது.

தி.மு.க., கொறடா எ.வ.வேலுவுக்கு நான் பேச வாய்ப்பளித்தும், அதை பயன்படுத்தாமல், உள்நோக்கத்துடன் சபையை நடத்த விடாமல், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் தடுத்துக் கொண்டே இருந்தனர். அதனால், அவர்களை வெளியேற்றுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.

இது, எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அமைதி காத்த த.வெ.க.,வினருக்கு நன்றி. நடப்பதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link