மதுரை: சிங்கம்புணரி அருகே, ஐந்து சிறுமியரை பலாத்காரம் செய்ததாக பதிவான போக்சோ வழக்கில், சந்திரன், 45, என்பவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
சிவகங்கை மாவட்டம், மருதிபட்டியைச் சேர்ந்த சந்திரன். விறகு வெட்டும் தொழிலாளி. இவர், 2024 பிப்., 4ல் ஒரு சிறுமியிடம், ‘மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடலாம்’ எனக்கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும், மேலும் நான்கு சிறுமியரை தின்பண்டம் வாங்கி தருவதாகக் கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும், திருப்புத்துார் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்தனர்.
விசாரித்த சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம், 2026 ஏப்ரலில், வெவ்வேறு பிரிவுகளில் ஐந்து துாக்கு தண்டனை, ஆயுள் சிறை உள்ளிட்ட தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சந்திரன் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து சிறுமியரும் முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அச்சிறுமியரின் பெற்றோருக்கும், மனுதாரருக்கும் ஏற்கனவே தனிப்பட்ட முன்விரோதம் இருந்துள்ளது.
இதற்காக பழி வாங்கும் நோக்கில், மனுதாரருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டை, அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது.
கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை, மதுரை மத்திய சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.
