தமிழகத்துக்கு 6,000 கன அடி நீர் 15 நாட்களுக்கு திறக்க உத்தரவு

– நமது நிருபர் –

‘தமிழகத்துக்கு தினமும் 6,000 கன அடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்’ என, கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பருவமழை சரியாக பெய்யாததால், அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக கர்நாடக அரசு கூறுகிறது; இதனால், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக, 15 நாட்களுக்கு ஒரு முறை, இரு மாநில அரசுகளின் கருத்துக்களை பெற, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் டில்லியில் நடக்கிறது. இதன்படி டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், ‘தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 6,000 கன அடி வீதம், அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்’ என, கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.

இது குறித்து, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி: காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், நம் மாநில நீர்ப்பாசன துறை அதிகாரிகள் வலுவான வாதத்தை முன்வைத்தனர். தமிழகம் 17,000 கன அடி தண்ணீர் திறக்கும்படி கேட்டது. ஆனால், கடந்த ஒரு வாரமாக காவிரி படுகைக்கு வரும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.

இத்தகைய கடினமான சூழ்நிலையில், எங்களால் 6,000 கன அடி தண்ணீரையே திறக்க இயலாது. பூஜ்ஜிய நீர் வெளியேற்றத்தை உறுதி செய்ய, நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

டில்லியில் அமர்ந்து உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரிகளுக்கு, உண்மையான கள நிலவரம், யதார்த்தம் புரியவில்லை. முதல்வர் சிவகுமாருடன் ஆலோசித்து, இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link