தலைமை செயலக துறைகள் பட்டியலில் 'ஹிந்து சமய அறநிலையத்துறை'

சென்னை: தமிழக தலைமை செயலகத்தில், ‘ஹிந்து சமய அறநிலையத் துறை’ எனும் புதிய தனித்துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு தலைமை செயலர் சாய்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் நிர்வாக வசதிக்காகவும், பணிகளை மேலும் விரைவுபடுத்தவும் தலைமை செயலகத்தில் ‘ஹிந்து சமய அறநிலையத் துறை’ என்ற பெயரில் புதிய தனித் துறை ஒன்றை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இதுவரை இயங்கி வந்த அறநிலையத்துறை ஆணையரகம், இனி முழுமையாக இந்த புதிய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

புதிய துறை உருவாக்கத்தை தொடர்ந்து, தமிழக அரசு நிர்வாக விதிகள், தலைமை செயலக நடைமுறை விதிகளில் தேவையான திருத்தங்களை, மனித வள மேலாண்மைத் துறை தனியாக வெளியிடும்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலராக உள்ள ராஜாராமன், மறு உத்தரவு வரும் வரை, இந்த புதிய ஹிந்து சமய அறநிலையத் துறையின் செயலராக கூடுதல் பொறுப்பை கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link