டாடா குழுமத்தின் 3 அறக்கட்டளைகளில் இருந்து தான் நீக்கப்பட்டது, அறக்கட்டளைகளின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ‘பாய் ஹீராபாய் அறக்கட்டளையின்’ (Bai Hirabai Trust) சில அறங்காவலர்களின் தகுதி ஆகியவை குறித்து முன்னாள் அறங்காவலர் மெஹ்லி மிஸ்திரி எழுப்பியுள்ள ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்க, டாடா டிரஸ்ட் அமைப்புக்கு வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை மகாராஷ்டிர அறநிலைய ஆணையர் (Charity Commissioner) அவகாசம் வழங்கியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கில், சர் ரத்தன் டாடா டிரஸ்ட்டின் (SRTT) அறங்காவலராக இருந்த விஜய் சிங் அப்பொறுப்பில் இருந்து விலகியதைக் காரணம் காட்டி, வாதங்களை முன்வைக்க அறக்கட்டளை நிர்வாகம் கூடுதல் கால அவகாசம் கோரியது. இதையடுத்து விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. விஜய் சிங்கின் பணிக்காலம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் அப்பொறுப்பைத் தொடர விரும்பாததால் தற்போது அறங்காவலராக இல்லை என அறக்கட்டளை தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பரும், டாடா குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியவருமான மெஹ்லி மிஸ்திரியின் பணிக்காலத்தை நீட்டிக்க அறக்கட்டளை வாரியங்கள் மறுத்து வாக்களித்ததை அடுத்து, கடந்த அக்டோபரில் அவர் 3 அறக்கட்டளைகளின் அறங்காவலர் பொறுப்பில் இருந்து விலகினார். அவரது இந்த வெளியேற்றம், டாடா அறக்கட்டளைகளின் நிர்வாக நடைமுறைகள், நிதி ஆதாய முரண்பாடுகள் (Conflict of Interest) மற்றும் அறங்காவலர்கள் நியமிக்கப்படும் விதம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
டாடா குழும நிறுவனங்களிடம் இருந்து சில அறங்காவலர்கள் பெறும் ஊதியம் மற்றும் கமிஷன் தொகைகள் குறித்தும், அறக்கட்டளை மற்றும் குழும நிறுவனங்கள் இரண்டிலும் ஒரே நேரத்தில் பொறுப்பு வகிப்பதால் எழும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்தும் மிஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். அறக்கட்டளையின் பிரதிநிதிகளாக நிறுவனங்களின் வாரியங்களில் செயல்படும் அறங்காவலர்கள் பெறும் சன்மானம், தனிநபர்களுக்குச் செல்லாமல் அறக்கட்டளையின் கணக்கிற்கே வரவு வைக்கப்பட வேண்டும் என அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு நிர்வாகத்தில் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, பதவியில் உள்ள அனைத்து அறங்காவலர்களின் பதவிக்காலத்தையும் நீட்டிக்க 2024 அக்டோபர் 17 அன்று ‘சர் ரத்தன் டாடா டிரஸ்ட்’ மற்றும் ‘சர் தொராப்ஜி டாடா டிரஸ்ட்’ ஆகியவற்றின் அறங்காவலர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், அந்த முடிவுக்கு மாறாக, பின்னர் சில அறங்காவலர்கள் தனது பதவிக்கால நீட்டிப்புக்கு எதிராக வாக்களித்ததாக மிஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
பாய் ஹீராபாய் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோர் ஜோராஸ்ட்ரியன் (பார்சி) மதத்தை சேராதவர்கள் என்பதால் அவர்களது நியமனத்தை எதிர்த்து மிஸ்திரி முறையிட்டிருந்தார். எனினும், அவர்கள் இருவரும் தற்போது அந்த அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பில் இல்லை. இதனிடையே, மகாராஷ்டிர அறநிலைய ஆணையரின் முந்தைய உத்தரவைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெறவிருந்த டாடா டிரஸ்ட்டின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், நிரந்தர அறங்காவலர்களின் எண்ணிக்கை தொடர்பான புகார்கள் குறித்து ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அதற்கான அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாக அறநிலைய ஆணையர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் இயக்குநர் மற்றும் டாடா டிரஸ்ட் அறங்காவலரான வேணு சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் காத்யாயனி அகர்வால் ஆகியோர் அளித்த மனுக்களையும் அந்த உத்தரவு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
