ஜெய்ப்பூர் உள்ளாட்சித் தேர்தல்: 8 முஸ்லிம் முகங்களை முன்னிறுத்திய பா.ஜ.க; வாக்காளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவது ஏன்?

Written by: Parul Kulshreshta

ஜெய்ப்பூர் மாநகராட்சியின் (JMC) 150 வார்டுகளுக்கு நடைபெறவுள்ள தீவிரமான உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நகரின் வீதிகள் முழுவதும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பிரசார வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு வேட்பாளர்களும் தங்களின் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தாத அணுகுமுறையிலிருந்து விலகி, தற்போது ஜெய்ப்பூர் மாநகராட்சித் தேர்தலில் 8 முஸ்லிம் வேட்பாளர்களை பாஜக களமிறக்கியுள்ளது. இதனால் இந்த வேட்பாளர்கள் கடுமையான களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் காலை 8.30 மணிக்கே வீடுகளில் இருந்து கிளம்பும் வேட்பாளர்கள், மக்களை நேரில் சந்தித்தும் பொதுக்கூட்டங்களை நடத்தியும் வருகின்றனர். மாலை நேரங்களில் திறந்தவெளி ஜீப்புகளில் பேரணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த 8 வேட்பாளர்களுமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வார்டுகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராம்லால்சர்மா கூறுகையில், வாக்காளர்களின் விகிதாச்சாரத்தை கவனத்தில் கொண்டே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முஸ்லிம் மக்கள் வளர்ச்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதால் நாங்க சிறப்பாக செயல்படுவோம். எங்கள் முயற்சிகளில் கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

வார்டு எண் 128-ல் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மஜித் கான், கட்சியின் சிறுபான்மையினர் அணியில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருபவர். தனது 18 ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த பரிசு இது என்கிறார். மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் பாஜகவில் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். நீண்ட காலமாக இந்த வார்டில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறேன்; நிச்சயம் வெற்றி பெறுவேன் என மஜித் கான் நம்பிக்கை தெரிவித்தார். 

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்த வார்டில், பா.ஜ.கவை ஆதரிக்காத பலரும் மஜித் கான் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர். உள்ளூர் தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த சம்ஷேர் கான் என்பவர் பேசுகையில், மஜித் பாய் மீது எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை; சமூகத்திற்காக நீண்டகாலமாகப் பணியாற்றுகிறார். ஆனால், பாஜகவுக்கு வாக்களிப்பதைத்தான் எங்களால் ஏற்க முடியவில்லை என்றார். அங்கிருந்த மற்றொருவர் இதற்கு மறுப்பு தெரிவித்து, மஜித் வெற்றி பெறலாம்; ஏனெனில் உள்ளாட்சித் தேர்தல்கள் அரசியல் சித்தாந்தத்தால் வெல்லப்படுவதில்லை, வேட்பாளரின் தனிப்பட்ட செயல்பாடுகளாலேயே வெல்லப்படுகின்றன என்றார்.

மஜித் கானைத் தவிர, ஷாநவாஸ் அன்சாரி (வார்டு 19), ஜாகிர் கான் (109), ஃபரிவு (113), ஷபாப் ஜஹான் (117), மிஜானா மிர்சா (136), ரயீஸ் மன்சூரி (137) மற்றும் அப்சானா (146) ஆகியோரையும் பாஜக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. வார்டு எண் 136-ல் போட்டியிடும் மிஜானா மிர்சா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சர்ச்சை கருத்துகளுக்குப் பெயர் பெற்ற பாஜக எம்.எல்.ஏ பாலமுகுந்தாச்சார்யாவின் ஹவா மஹால் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மிஜானாவின் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கே முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் பாலமுகுந்தாச்சார்யாவின் படங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவரது கணவர் முகமது கய்யூம், எம்.எல்.ஏ பாலமுகுந்தாச்சார்யாவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். அவர் முஸ்லிம்களுக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார். அவரது சில பேச்சுகள் சமூகத்தில் எதிர்மறையாகப் பார்க்கப்பட்டிருக்கலாம்; ஆனால் உதவி கேட்டுச் சென்ற எந்தவொரு முஸ்லிமுக்கும் அவர் உதவாமல் இருந்ததில்லை என்கிறார். இருப்பினும், பாலமுகுந்தாச்சார்யாவின் கட்சிக்கு இங்கிருக்கும் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சில உள்ளூர் வாக்காளர்கள் சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றனர். இதேபோன்ற மாறுபட்ட கருத்துக்கள் வார்டு 113, 117 மற்றும் 137 ஆகியவற்றிலும் எதிரொலித்தாலும், கணிசமான மக்கள் பாஜகவின் முஸ்லிம் வேட்பாளர்களை நன்மதிப்புடனே பார்க்கின்றனர்.

களமிறக்கப்பட்டுள்ள 8 முஸ்லிம் வேட்பாளர்களில், வார்டு 19-ல் போட்டியிடும் ஷாநவாஸ் அன்சாரி மட்டுமே கடந்த முறை போட்டியிட்டு மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ள ஒரே வேட்பாளர் ஆவார். 2020 தேர்தலில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். இம்முறை தீவிரமாக உழைத்து வருகிறேன். மத்தியில் பாஜக, மாநிலத்தில் பாஜக, மாநகராட்சியிலும் பாஜக மேயர் மற்றும் கவுன்சிலர்கள் வந்தால் மக்களுக்கு கூடுதல் உதவிகளைச் செய்ய முடியும். இது ஜெய்ப்பூரில் ‘டிரிபிள் என்ஜின்’ அரசாக அமையும். மத்திய அரசின் திட்டங்கள் இந்து, முஸ்லிம் என இரு தரப்பிற்கும் பயனளித்துள்ளன. முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காமல் இருக்க எந்தக் காரணமும் இல்ல என்று ஷாநவாஸ் கூறுகிறார்.

ஜெய்ப்பூர் மாநகராட்சியுடன் சேர்த்து, மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு செப்.9 மற்றும் 11 தேதிகளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 14 அன்று நடைபெறும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது அசோக் கெலாட் அரசு ஜெய்ப்பூர் மாநகராட்சியை ‘கிரேட்டர்’ (150 இடங்கள்) மற்றும் ‘ஹெரிட்டேஜ்’ (100 இடங்கள்) என இரண்டாகப் பிரித்து 2020 நவம்பரில் தேர்தல் நடத்தியது. அப்போது ஹெரிட்டேஜ் பகுதியில் 13 முஸ்லிம் வேட்பாளர்களையும், கிரேட்டர் பகுதியில் ஷாநவாஸ் அன்சாரியை மட்டுமே பாஜக நிறுத்தியது. அதில் வார்டு 88-ல் ரயீஸ் குரேஷி மட்டுமே வெற்றி பெற்ற ஒரே முஸ்லிம் பாஜக வேட்பாளர் ஆவார். அப்போது ஹெரிட்டேஜை காங்கிரஸும், கிரேட்டரை பாஜகவும் கைப்பற்றின. டிச.2023-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த அக்டோபர் 2025-ல் இவ்விரு மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றிணைத்து ஒற்றை 150 வார்டுகள் கொண்ட ஜெய்ப்பூர் மாநகராட்சியாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Source link