தள்ளிப்போகும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; அமைச்சர் அருண்ராஜ் தகவல்!

அரசு மருத்துவமனை மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, விஜய் தமிழக முதல்வரானப் பிறகு அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து, 22 கேரட் 916 ஹால்மார்க் தரச் சான்றுடன் மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 755.83 கோடி ஒதுக்கப்பட்டது. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப்போவதாக அமைச்சர் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாளை லண்டன் செல்லவுள்ளார். அதன் காரணமாக திட்டமிட்ட தேதியில் தொடங்கப்படாது, தள்ளிப்போகிறது. எப்போது திட்டம் தொடங்கும் என விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும். இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்” என்று கூறினார். 

Source link