கனடாவிற்குத் தடைவிதித்த அமெரிக்கா; பதிலடி கொடுத்த பிரதமர்

அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக, கனடாவிற்கு 50 சதவீத வரிவிதித்திருந்தது அமெரிக்கா.  இதற்குப் பதிலடியாகக் கனடாவும் அமெரிக்கா மீதான வரியை கணிசமாக உயர்த்தியது. இதனால், இரு நாட்டு உறவுகளிலும் மேலும் விரிசல் அதிகரித்தது. இதையடுத்து, கனடா கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்கும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.  

இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்கான தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த கனடா மீதான இறக்குமதி தடைகள், வரும் செப்டம்பர் 29 முதல் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனைத்தொடர்ந்து, அமெரிக்கா விதித்த வரிகளுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் பொருட்கள் மீது கனடாவும் புதிய வரிகளை விதித்தது. இந்த புதிய வரிகள் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்கா இந்த தடை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், பெரும்பாலான மதுபானங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் உள்ளிட்டவை தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மேலும் சில கனடாவின் பிரபல சீஸ் வகைகளுக்கு 50 சதவீத கூடுதல் வரியும் அமெரிக்கா விதித்துள்ளது.  

இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் காரணமாக, இரு நாடுகளும் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கனடாவின் பிரதமர் மார்க் அமெரிக்காவிற்குப் பதிலடி தரும் வகையில் முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, கனடா தனது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என உறுதியுடன் தெரிவித்துள்ளார். 

Source link