சென்னை: முதல்வர் விஜய் குறிப்பிட்ட கரூர் கேங்கிற்கு எதிரான சாட்சிகளை திரட்டி வருகிறோம். நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி;
போன ஆண்டு, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதலாக டாஸ்மாக் மதுபானங்களை விற்றவர்களை சஸ்பெண்ட் செய்யவில்லை. ஆனால் நாங்கள், கடந்த காலங்களில் அதிக விலைக்கு விற்றவர்களுக்கு நாங்கள் திரும்பவும் பணி வழங்கி உள்ளோம்.
ஏன் என்றால் கடந்த ஆண்டுகளில் அதிக விலைக்கு விற்க சொன்னதே திமுகதான். 5 ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தவர்களை 10 ரூபாயாக வாங்கு என்று கூறியதே திமுக தான். இதை நான் சட்டசபையில் கூட சொல்லி இருக்கிறேன்.
அப்படி சிலரை கண்துடைப்புக்காக கடந்த ஆட்சியில் சஸ்பெண்ட் செய்தவர்களை திரும்பவும் பணியில் சேர்த்து இருக்கிறோம். இப்போது நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருப்பது செப்.1ம் தேதியில் இருந்து யாரெல்லாம் அதிக விலைக்கு மதுபானங்களை விற்றார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
ஒரு மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்கப்பட அந்த கடை ஊழியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளரும் காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எங்களின் நோக்கம், யாரையும் காப்பாற்றுவது அல்ல.
கரூர் கேங் யார் என்று கடந்த காலங்களில் இதே துறையின் அமைச்சரை, முதல்வர் சொல்லி இருக்கிறார். அமலாக்கத்துறை கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முதல்வர் படித்து இருக்கிறார்.
இதெல்லாம் சொல்வது எதற்காக? சும்மா சொல்லிவிட்டு செல்வதற்காகவா? நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கான முயற்சிகள், சாட்சிகள் எல்லாம் திரட்டி வருகிறோம். நிச்சயம் அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் பேட்டி அளித்தார்.
