‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ‘டோரதி’ எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இயக்குவது மட்டுமல்லாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார். இவரோடு ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது 1540வது படமாகும். இவரது இசையில் வெளியான ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ பாடல்கள் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து படத்தின் பின்னணி இசை நேரடி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. ஒரு திரைப்படத்தின் பின்னணி இசை படம் வெளியாவதற்கு முன்பு நேரடியாக இசைக்கப்பட்டதும் அதை ஒரு ஆல்பமாக வெளியிடப்பட்டதும், இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் வசந்த், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேடையில் இளையராஜா பேசுகையில், “நீங்கள் விடுகின்ற மூச்சினை நான் இழுத்துகொண்டிருக்கிறேன். நான் விடுகின்ற மூச்சு உங்கள் மூச்சோடு கலந்திருக்கிறது. அதைவிட உங்கள் உயிரோடு உயிராக, உடலோடு உடலாக, நினைவோடு நினைவாக, மனதோடு மனதாக எனது இசை ஓடிக்கொண்டிருக்கிறது. நான் பேசினால் தப்பு தப்பாக இருக்கும். உங்கள் மனதில் ஈட்டி போல குத்தும். அதையெல்லாம் நீங்கள் என்னை திட்டுவதுக்காக உபயோகிக்கலாம். அதனால் பேசாமல் இருப்பது நல்லது. மௌனத்தை ஏன் பின்பற்றுகிறேன் என்றால் அதற்கு இதுதான் காரணம்” என்றார்.
பின்பு அவரிடம் கே.பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களுடம் பணிபுரிந்துவிட்டு என்னைப் போன்ற ஒரு சின்ன இயக்குநர் வந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று கார்த்திக் சுப்புராஜ் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “என்னுடைய நோக்கமே புதிதாக வரும் இயக்குநர்களுக்கு தப்பாமல் இசையமைத்துவிட வேண்டும் என்பது தான். ஏனென்றால் அவர்களிடம் தான் வெறும் பாத்திரம் இருக்கும். பாத்திரத்தில் நிறைய திரவத்தை ஊற்றி வந்தால் அதி நான் என்ன ஊற்றுவது. அதனால் புதிதாக வருபவர்கள் வெறும் கதையோடு மட்டும் தான் வருவார்கள், அவர்கள் சில பாடல்களை சொல்லி இது மாதிரி வேண்டும் அது மாதிரி வேண்டும் என்று கேட்பதெல்லாம் என் காதில் ஏறாது. என்னுடைய இசை தான் அவர்களுக்கு ஒரு இசையை தேர்ந்தெடுக்கும் முறையை கற்று கொடுத்தது. என்னுடைய இசையைத் தான் அவர்கள் ரெஃபரன்ஸாக வைத்துக்கொள்கிறார்கள். என் இசையை மீறி அவர்களால் யோசிக்க முடியாது.
அவர்கள் எல்லா இசையையும் விரல் நுனியில் அறிந்து வைத்திருக்கலாம், ஆனால் என் இசை மாதிரி அது இருக்கிறதா? எல்லாரையும் டெஸ்ட் செய்யுங்கள். கர்வத்தோடு சொல்கிறேன் என நினைக்காதீர்கள், கர்வத்தோடு தான் சொல்கிறேன். ஏனென்றால் என் இசை போல் உலகத்தில் எதுவும் இல்லை. எங்கே இருக்கிறது எடுத்து காட்டுங்கள். இப்போது இருப்பவர்கள் எல்லாம் இசையில் பயிற்சி பெற்றவர்கள். ஆனால் நான் அப்படியில்லை. எனக்கு யாருமே பயிற்சி கொடுக்கவில்லை.
நான் பொட்டல்காட்டில் இருந்து கல்லும் முள்ளும் குத்தி வந்திருக்கிறேன். இசை என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. இன்னமும் தெரியாது. அதற்கு அடையாளம் தான் நான் இன்னமும் இசை அமைத்துகொண்டிருக்கிறேன். இசை என்னவென்று தெரிந்திருந்தால் இந்நேரம் நான் வீட்டில் நிம்மதியாக சோபாவில் அமைதியாக உட்கார்ந்திருப்பேன்” என்றார்.
