திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் மரங்களில் ஏறி போராட்டம்; விடுதலை செய்யக் கோரிக்கை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்த், தங்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட கைதிகள் மரங்களின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு 7 பேர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 17 கைதிகள் தற்கொலை முயற்சியுடன் திடீர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீன் பெற்ற வெளிநாட்டினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி மரங்களின் மீது ஏறி நின்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகாமில் உள்ள தங்களின் தண்டனைக் காலம் முடிந்த பிறகும், தங்களை கூடுதலான காலம் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 17 கைதிகள் தற்கொலை முயற்சியுடன் திடீர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், சிலர் தங்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடித்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வழக்குகள் முடிவடைந்தவர்களை உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்பவோ அல்லது முகாமில் இருந்து விடுதலை செய்யவோ வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினரில், வங்கதேச நாட்டைச் சேர்ந்த 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர், இலங்கையைச் சேர்ந்த 10 பேர் நேற்று மாலை சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறினர். ஒரு சிலர் மரத்தின் கிளையில் கயிறுகளை தயார் செய்து தூக்கு மாட்டுவதைப் போல “செட்டப்” செய்தனர். நைஜீரியாவைச் சேர்ந்த ஆய்ஷா உள்ளிட்ட இரண்டு பெண்மணிகள் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மரத்திலிருந்து கயிறு அறுந்த நிலையில் கீழே விழுந்த இருவரும் சுயநினைவை இழந்துள்ளனர். மேலும், இலங்கைத் தமிழர்கள் ஐந்து பேர் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர்களும் மயக்க நிலையை அடைந்துள்ளனர்.

முகாம் கதவுகளின் அருகே ஒருபுறம் போலீஸாரும், மறுபுறம் போராட்டக்காரர்களும் குவிந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சையும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த சிறப்பு முகாமிற்குள் அதிர்ச்சியூட்டும் குற்றச்சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
முகாமில் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுவன், அதே நாட்டைச் சேர்ந்த 10 மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, அச்சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், கியூ பிரிவு போலீசார் விரைந்து சென்று அனைவரையும் சமாதானம் செய்து மரத்தில் இருந்து கீழே இறக்கினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கே. கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த முகாமில் மொத்தம் 183 பேர் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 176 பேரில் 39 பெண்களும் (10 இலங்கை பெண்கள் உட்பட), 137 ஆண்களும் (116 இலங்கை ஆண்கள் மற்றும் வங்கதேசம், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்) தொடர்ந்து முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போலி பாஸ்போர்ட் வழக்குகளில் கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி

Source link