கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தைத் தொடர்ந்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்தார். இப்படம் அவரது 47வது படம் என்பதால் தற்காலிகமாக ‘சூர்யா 47’ எனத் தலைப்பு வைக்கப்பட்டு உருவாகி வந்தது. இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் தயாரிக்கின்றனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லேன் நடித்துள்ளார். அதோடு ஆனந்த ராஜ் மற்றும் ஜான் விஜய் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சுஷின் ஷ்யாம் கவனித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து கடந்த ஜூலையில் முடிந்தது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது டைட்டில் டீசர் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு ‘சீன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரில் ஒரு கொலையை விசாரிக்கும் காவல் அதிகாரியாக எண்ட்ரி கொடுக்கிறார். டிஎஸ்பி இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் அவர் வருகிறார்.
ஆனால் அவர் சரியாக விசாரணை நடத்தவில்லை என சிலர் பேச, பின்பு அவர் தம் அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் போல் காட்சிகள் விரிகிறது. பின்பு ஜெயிலில் கைதிகள் நடுவே சூர்யா நடந்து வருவது போலவும் அடுத்து கோவத்துடன் சண்டை முடிந்து மழையில் நடந்து வருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இறுதியாக அவரது காக்க காக்க படத்தில் இடம் பெற்ற ‘உயிரின் உயிரே’ பாடலின் ஹம்மிங்கை ஜாலியாக பாடுகிறார். அத்துடன் டீசர் முடிகிறது. இடையே, அவர் கைதிகள் நடுவே நடந்து வரும் போது, “உனக்கு வேணா நான் உன்னை அரஸ்ட் பண்ண ஒரே போலீஸா இருக்கலாம். ஆனா எனக்கு நான் போட்ட 9-யிரத்தி சில்றை கிரிமினல்ஸ்ல… நீ ஒரு சில்ற…’ என்ற வசனத்தை சூர்யா பின்னணியில் பேசுகிறார்.
ஏற்கனவே காவல் அதிகாரியாக சூர்யா நடித்த ‘காக்க காக்க’, ‘சிங்கம்’ படத்தின் 1 மற்றும் 2ஆம் பாகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது மீண்டும் காவல் அதிகாரியாக அவர் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆனால் இதுவரை வெளியான படங்களை காட்டிலும் இதில் சற்று வித்தியாசமான காவல் அதிகாரியாக அவர் தோன்றுகிறார்.
