“இந்தக் கூட்டணி தேர்தல் களங்களில் வெற்றிவாகை சூடும்”

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தவெக ஆதரவு மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (09.09.2026) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  உள்ளிட்ட முக்கியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர். அப்போது இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வ வெளியானது. 

இதனையடுத்து வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையில், கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தோழமைக் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று நாங்கள் பங்கெடுத்துள்ள அனைவரும் ஒரே விதமான கருத்தையே பிரதிபலித்து, இந்துத்துவா பாசிச சக்திகளுக்கு தமிழகத்தில் இன்றுவரை இடமில்லை; இனியும் இடமில்லை; இங்கே பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற உணர்வோடு கரம் கோர்த்திருக்கின்றோம்.

இந்தக் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளோம். அந்தப் பெயரிலேயே எங்களுடைய இலக்குகள் ஒன்றான மதச்சார்பின்மை, இன்னொன்றான சமூகநீதி ஆகிய இரண்டையும் இலக்காக வைத்து கூட்டணி இயங்கும். மாவட்ட வாரியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளில் நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் எடுக்கின்ற முடிவின்படி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும், அதில் தோழமைக் கட்சிகள் பங்கெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய கருத்தாக, முதலமைச்சர் விஜய் தோழமைக் கட்சிகளின் தலைவர்களோடு இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தோம். அந்தக் கருத்தும் தமிழக வெற்றிக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டணி மதச்சார்பின்மையையும், சமூகநீதியையும், கூட்டாட்சித் தத்துவத்தையும், தமிழக வாழ்வாதாரங்களை காக்கின்ற, பாதுகாக்கின்ற அந்த உணர்வோடு செயல்படும். சட்டமன்றத்தில்  முதலமைச்சர் விஜய் காவிரி பிரச்சனை உள்ளிட்ட மேகதாது பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைத்ததையும் நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

இந்தக் கூட்டணி தோளோடு தோள் நின்று தமிழகத்திலும், புதுவையிலும் வெற்றிகரமாக செயல்படும். தேர்தல் களங்களில் வெற்றிவாகை சூடும் என்ற நம்பிக்கையுடனும், உணர்வுடனும் இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

Source link