'முதல் மனைவி விவாகரத்து பெறாத நிலையில் 2வது மனைவி ஓய்வூதியம் கோர முடியாது': உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:‘முதல் மனைவி விவகாரத்து செய்யப்படாத நிலையில், 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமையில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறை ஊழியராக ஆர்.சமன் பணியாற்றினார். அவரது மறைவுக்கு பின், இரண்டாவது மனைவியான தமிழரசி, குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி விண்ணப்பித்தார். முதல் மனைவி நளினியை விவகாரத்து செய்யாமல், சமன் இரண்டாவது திருமணம் செய்ததால், தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் தர, அரசு மறுத்து விட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழரசி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:சமன் – நளினி ஆகியோர் பரஸ்பரம் பிரிந்து கொள்வதாக ஒப்பந்தம் செய்ததை, சட்டப்படியான விவாகரத்தாக கருத முடியாது. அதனால், சமன் – தமிழரசி திருமணம் செல்லதக்கதல்ல என்பதால், குடும்ப ஓய்வூதியம் கோர உரிமையில்லை. சட்டப்படி திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்களை தான், விதவையாக கருத முடியும் என்பதால், தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையான தமிழரசி, அதற்கான ஓய்வூதியத்தை பெற்று வருகிறார்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Source link