இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தோழமைக் கட்சிகளிடம் அதிமுக ஆதரவு திரட்டி வருகிறது.
இப்படியாக இடைத்தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், தவெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ‘வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் தொகுதியில் தவெக துணைப் பொதுச் செயலாளர் மரகதம் குமரவேலுவும் தாராபுரம் தொகுதியில் திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சத்தியபாமாவும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலுவும், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சத்யபாமாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். எம்.எல்.ஏவாக பதவியேற்ற சில நாட்களிலேயே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், இருவரும் தங்களுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இருவரும் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் தவெக சார்பாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
