மதுரை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேரை கொலை வழக்குப்பதிவு செய்து காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் தன் நகைகளை திருடிவிட்டதாக நிகிதா என்பவர் கடந்தாண்டு ஜூன் 27ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்குமாரை அழைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தியது. வழக்கில் தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவக்குமார் மற்றும் ஏட்டு இளையராஜா ஆகியோரின் பெயர்களும் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5வது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன், சண்முகசுந்தரம், ரமேஷ்குமார், சிவக்குமார், இளையராஜா ஆகியோர் மீது கொலைக்குரிய பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்து நான்கு பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
