கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளின் போது, மைதானத்தில் பந்தல் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அமைக்கும் பணிகளில், விளையாட்டுப் பயிற்சி பெறும் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளின்போது, மைதானத்தில் சாமியானா பந்தல் அமைப்பது மற்றும் பிளக்ஸ் பேனர் கட்டுவது போன்ற உடல் உழைப்பு சார்ந்த பணிகளைச் செய்வதற்கு, அங்கு பயிற்சி பெறும் இளம் விளையாட்டு மாணவர்களை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, சாதனைகள் படைக்கச் சேர்க்கப்பட்ட மாணவர்களை இது போன்ற மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தியது விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பயிற்சி பெற வரும் இளம் மாணவர்களை இதுபோன்ற களப்பணிகளிலும், கூலித் தொழிலாளர்களின் பணிகளிலும் ஈடுபடுத்துவது அவர்களின் மன உறுதியையும், கல்வி மற்றும் விளையாட்டு எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கும்” என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் ஆட்சித் தலைவர் முத்துக்குமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். எனினும், “அரசு நிதியுதவியுடன் நடைபெறும் இத்தகைய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தனிநபர் அல்லது தனியார் அமைப்புகளின் மூலம் தொழிலாளர்களை அமர்த்திச் செய்ய வேண்டிய பணிகளை, பிஞ்சு மாணவர்களை வைத்து வேலை வாங்குவது எந்த வகையில் நியாயம்?” என்று சமூக ஆர்வளர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும், விளையாட்டுத் துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, எதிர்காலத்தில் மாணவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தாமல் இருக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு உலகத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
