அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இதன் மூலம், காங்கிரஸ் உறுப்பினர்கள்/ செனெட் சபை உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதுவரை, அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த மசோதாக்கள் எளிதாக நிறைவேற்றப்பட்டன. காரணம், நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) ட்ரம்ப்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையுடன் உள்ளது. அந்த பெரும்பான்மையைத் தக்க வைக்க வேண்டும் என்றால், இந்த தேர்தலில் குடியரசு கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
எனவே, குடியரசு கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இருப்பினும், கடந்த 6 மாதகாலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போர், ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் தொடங்கியது முதலே, அமெரிக்கா கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, இந்த போரினால் அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. அதே போல, ஆயுதக்கையிறுப்பு குறைதல், விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. இது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மக்களைக் கவரும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, நேற்று (09-09-26) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ப், “வருகிற தேர்தலில் மேல்சபை, கீழ்சபை என இரண்டிலும் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால், நம்முடைய அபரிவிதமான பொருளாதார வெற்றியால், அனைத்து அமெரிக்கக் குடிமக்களுக்கு 5,000 டாலர் (ரூ.4.7 லட்சத்திற்கும் அதிகமாக) டிவிடெண்டாக வழங்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.
இது அமெரிக்க அரசியலில் கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு டிவிடெண்ட் இல்லை. இது லஞ்சம் என்று சமூக வலைத்தளங்களில் சில அமெரிக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, மக்களின் வாக்குகளைக் கவரவே அதிபர் ட்ரம்ப் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
