22 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்; சபாநாயகர் அதிரடி நடவடிக்கை

தெலுங்கானா மாநில, சட்டப்பேரவையில் நேற்று (09-09-26) பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பிஆர்எஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, பெண் உறுப்பினர்களிடம் காவல் துறையினர் தவறாக நடந்துகொண்டதாகவும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதனைத்தொடர்ந்து,  அவர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று முழக்கமிட்டனர். இதனால், அவை நடைபெறாமல் முடங்கியது.  

இந்நிலையில், அவைத்தலைவர் (சபாநாயகர்) கடம் பிரசாத் குமார் அவர்களை அமைதிப்படுத்த முயன்ற போதும், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமளியில் ஈடுபட்டவர்கள் மீது அவைத்தலைவர் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, அவைத்தலைவரின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சியான பிஆர்எஸ் உறுப்பினர்கள் 22 பேர் நடப்பு மானியக் கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 119 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பிஆர்எஸ் கட்சி 37 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 22 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது, அவையின் எதிர்கால விவாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்த்து ஆளுநர் சிவ பிரதாப் சுக்லாவை சந்திக்க பிஆர்எஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம், தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Source link