சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வருகை

டெல்லியில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த இரண்டு நாள் மாநாட்டில் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு, மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையேயான பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆழமான விவாதங்கள் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மாநாட்டின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும், தலைவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யவும் டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (11.09.2026) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதோடு, போக்குவரத்துப் போலீசாரால் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்  சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அதிபர் ஷி ஜின்பிங் செப்டம்பர் 12 முதல் 13 வரை புதுடெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்” என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link