அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக 26 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. கட்டிட வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை, கட்டுமான திட்டமிடல், சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தலைமைச் செயலகம் எந்த இடத்தில் அமையும் என்பது தொடர்பாக நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கடலை ஒட்டிய முக்கியமான பகுதியில் இந்தப் புதிய நிர்வாக வளாகம் அமைய இருப்பதால், இடத் தேர்வு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. நிர்வாக ரீதியாக இது முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டாலும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்தியக் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புதிய தலைமைச் செயலக திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு தவறானது. மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கியமான நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். தமிழ்நாடு அரசு இம்முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.
சென்னை – பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட
தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்! pic.twitter.com/l1xaojamOc— CPI Tamilnadu (@CPItnOfficial) September 10, 2026
முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் மற்றும் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட ஒன்பது மீனவக் குடியிருப்புகள், முன்மொழியப்பட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன. சுற்றியுள்ள மீனவக் குடியிருப்புகளின் மக்கள், கடலை வெறும் குடியிருப்புப் பகுதியாக மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது அவர்களின் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பொது வளமாகவும் உள்ளது. மீன்பிடித்தல், படகுகளின் இயக்கம், மீன் இறக்குதல், வலைகள் மற்றும் மீன்களை உலர்த்துதல், மீன் விற்பனை, சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சார்ந்த தொழில்கள் இக்கடலோரப் பகுதியைச் சார்ந்தே நடைபெறுகின்றன.
இத்தகைய குறுகிய கடலோரப் பகுதியில் மிகப்பெரிய நிர்வாக வளாகம், அதனுடன் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுவது, ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள கடலோரப் பகுதியை மேலும் பாதிக்கும். 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கும், பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுவர்.
உயர் பாதுகாப்பு கொண்ட அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தின் வருகையால் தடுப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும், முக்கியப் பிரமுகர்களின் வாகனப் போக்குவரத்து, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியமர்த்தல் போன்றவை தவிர்க்க முடியாததாகும். இதன் விளைவாக, மக்களுக்கு பொதுவாகச் சொந்தமான கடற்கரைப் பகுதி படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக -பாதுகாப்பு வளாகமாக மாறும் அபாயம் உள்ளது.
மேலும், காலநிலை அவசரநிலை நிலவும் இன்றைய சூழலில் இத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றதும் ஆபத்தானதுமாகும். சென்னையின் கடலோரப் பகுதிகள் புயல்கள், கடல் எழுச்சி, வெள்ளம், கடலோர அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் அதிகரித்து வரும் ஆபத்தை எதிர்கொள்கின்றன. எனவே, அரசு பாதுகாப்பான மாற்று இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் ஆவணங்களில், இப்பரந்த கடலோரப் பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எளிதில் உள்ளாகும் பகுதிகளும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்மொழியப்படும் வளாகத்தை “பசுமை வளாகம்” என்று அழைப்பதால் மட்டும் அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகிவிடாது. நிலையான வளர்ச்சி என்பது பசுமைக் கட்டிடத்தை உருவாக்குவதில் தொடங்குவதில்லை; சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் தொடங்குகிறது.
மாநிலத்திற்கு நவீன நிர்வாகக் கட்டமைப்பு தேவைப்படலாம். ஆனால் நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் உணர்திறன் மிக்க கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதும், பொதுமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதும், ஜனநாயகப் பொது வெளியைச் சுருக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்.” என்று அவர் கூறியிருக்கிறார்.
பா.ஜ.க எதிர்ப்பு
இதேபோல், பா.ஜ.க-வின் தலைமை செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே தமிழக சட்டமன்றத்தையும், தலைமைச் செயலகத்தையும் அமைக்கும் த.வெ.க மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அரசின் முடிவு, ஆளுமையின் வெளிப்பாடு அல்ல. அகம்பாவத்தின், ஆணவத்தின் வெளிப்பாடு. இது வெறும் வீட்டுவசதி வாரிய நிலம் அல்ல, இது மீனவ மக்களின் உயிர்நாடி. நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான குடும்பங்கள், லூப் சாலை, திசை திருப்பப்பட்ட போக்குவரத்து, சுற்றுப்புற சூழல் கட்டுப்பாடுகளினால் ஏற்பட்டுள்ள சங்கடங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் “ஆக்கிரமிப்பு” நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏற்கனவே தங்கள் நிலத்தை இழந்துள்ளனர்.
இப்போது இந்த அரசு அதே மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு உயர் பாதுகாப்பு அதிகார வளாகத்தை அமைத்து மேலும் தொல்லை அளிக்க விரும்புகிறது. அதன் விளைவாக, பாதுகாப்பு வளையங்கள், மீனவர்களின் அன்றாட கடற்கரை பயன்பாடுகள் மற்றும் சிறு படகு மீன்பிடி தொழிலின் அழிவு ஆகியவை ஏற்படும். 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அதாவது குறைந்தது 10,000 மக்கள் தங்களின் இருப்பிடங்களை இழக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. மெரினா கடற்கரையிலிருந்து நம் மீனவ சமுதாயத்தினரை விரட்டியடிக்காமல், அவர்களின் உரிமைகளை பறிக்காமல் 25 ஏக்கர் நிலத்தைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத ஒரு அரசுக்கு, “100 ஆண்டு தலைமைச் செயலகம்” பற்றிப் பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை.
அரசின் இந்த அறிவிப்பானது பொதுமக்களின் மீதான மோசடியாகும்.” சட்டமன்ற அறிவிப்பு, அவசர அவசரமாக எடுக்கப்பட்ட அரசாணை, மற்றும் தமிழ் நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சியிடமிருந்து பெறப்பட்ட “ஒப்புதல்” குறிப்புகள் ஆகியவை உரியவர்களின் பொருளை யாருக்கும் தெரியாமல் விற்பதற்கு ஒப்பானது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி இன்னும் பெறப்படவில்லை. முழுமையான சுற்றுச்சூழல் அனுமதியும் கைவசம் இல்லை. அந்தக் கடற்கரையில் உழைக்கும் மக்களின் வாழ்வாதார பாதிப்பு குறித்து எந்த விளக்கமும் இல்லை. குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வெளியேற்றம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த நிலம் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்றும், அது திருப்பித் தரப்பட வேண்டும் என்றும் மீனவ சமூகங்கள் கூறுகின்றன. அரசு முதலில் ஒரு இடத்தை முடக்கிவிட்டு, பின்னர் அதன் சட்டப்பூர்வத்தன்மையைத் தேடுகிறது. இப்படித்தான் கடலோர மக்க ளும் நசுக்கப்படுகிறார்கள்.
சாந்தோம் நெடுஞ்சாலை, கிரீன்வேஸ் சாலை மற்றும் பட்டினப்பாக்கம் சிக்னல் ஆகியவை ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களாக உள்ளன. மெட்ரோ பணிகள் மேற்கண்ட இடங்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. பழைய சாலைகள் பழுதடைந்ததால் லூப் ரோடு மேம்படுத்தப்பட்டது. அதுவே இப்போது பேருந்துகள், கடற்கரைக் கூட்டங்கள், பள்ளிகள், சாந்தோம் தேவாலயம் மற்றும் பதிவுதுறை அலுவலகம் ஆகியவற்றால் நிரம்பி வழிகிறது. இந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் குறைந்தது 30,000 குழந்தைகளும், தினமும் அலுவலகங்களுக்கு அவசரமாகச் செல்லும் தங்கள் பிள்ளைகளை இங்கு விட்டுச்செல்லும் பெற்றோர்களும் தலைமைச் செயலகம் இங்கு வந்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். அரசின் முழு தலைமையகத்தையும் இந்த இடத்தில் கொண்டு வருவது ஒட்டுமொத்த தென் சென்னையையே முடக்கிவிடும், மேலும் உலகின் அழகிய கடற்கரைச் சாலையை விஐபி க்களின் இருப்பிடமாக மாறிவிடும். தலைமை செயலகத்திற்கான இந்த இடத் தேர்வு அனைத்து விதமான பார்வைகளிலும் தோல்வியடைகிறது.
இது கடல் அலைகளின் சீற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படக்கூடிய கடற்கரை நிலப்பகுதியாகும். ஒரு தலைமை செயலகத்திற்கு தேவையான தீயணைப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து வசதிகள், பசுமைப் பரப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகள் ஆகியவற்றை இருபத்தைந்து ஏக்கர் நிலத்தில் அமைக்க முடியாது. ரூ. 1,200 கோடி செலவில், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய இந்தக் கடற்கரைப் பகுதியில், மீனவக் குடியிருப்புகளுக்கு அருகிலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைவது அரசுக்கு மிகப்பெரும் தோல்வியை உருவாக்கும் செயலாகும்.
சென்னை மக்கள் இந்த யோசனையை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர். இக்கிராமங்களை இடமாற்றம் செய்யவும், இங்கு தலைமைச் செயலகம் மற்றும் தூதரகங்களுக்கான திட்டங்களை கொண்டுவரவும், இப்பகுதி வழியாகத் துறைமுகச் சாலைகளை அமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன; ஏனெனில், இந்தக் கடற்கரை வெறும் புகைப்படப் பின்னணியோ, படப்பிடிப்புக்கான இடமோ அல்ல. நவீன நகரம் உருவாவதற்கு முன்பிருந்தே, பல நூற்றாண்டுகளாக மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்; எனவே, ஒரு அரசாணை (GO) வெளியிடுவதன் மூலம் மட்டும் அரசுக்கு அந்த நிலத்தின் மீதான உரிமை கிடைத்து விடாது.
திரு. விஜய் அவர்களே, நவீன சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைப்பதை பாஜக எதிர்க்கவில்லை; தமிழகத்திற்கு அத்தகைய கட்டமைப்பு தேவைதான். ஆனால், இந்த இடம், இந்த அவசரம் மற்றும் கடற்கரை வாழ் தமிழர்கள் மீதான உங்களின் அலட்சியப் போக்கு ஆகியவற்றை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த அரசாணையைத் திரும்பப் பெறுங்கள். CRZ (கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள்), EIA (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு) மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் குறித்த விவரங்களை வெளியிடுங்கள். ஒரு சுவர் அமைப்பதற்கு முன்பாக மீனவக் கிராம மக்களின் கருத்துகளைக் கேளுங்கள். இதனால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். கடலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களிடமிருந்து கடலை அபகரிக்காத வகையிலான நிலத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இந்த அரசு இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தினால், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நீதிமன்றப் போராட்டங்கள் மற்றும் மெரினா கடற்கரையின் பாரம்பரிய மீனவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகியவற்றுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். பா.ஜ.க அம்மக்களின் பக்கம் உறுதியாக நிற்கும்.” என்று அவர் கூறியுள்ளார்.
