மடப்புரம் அஜித்குமார் வழக்கு : டி.எஸ்.பி. உள்ளிட்ட 4 காவலர்களைச் சிறையில் அடைக்க உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் இவர் மீது நகை திருடியதாக காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜீத்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின்போது போலீசார் அவரை கொடூரமாகத் தாக்கியதில் அடுத்த நாளான ஜூன் 29ஆம் தேதி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாகத் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், காவல் ஆய்வாளர்  ரமேஷ் குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமைக் காவலர் ஆகிய நான்கு பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (10.09.2026) ஆஜர்படுத்தப்பட்டனர். 

அப்போது நீதிபதி தாமோதரன், “இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு டிஎஸ்பி உள்ளிட்ட சிலர், அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போலியான பொது பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை உருவாக்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் என்பதால், தங்களது பதவியைப் பயன்படுத்தி வழக்கின் சாட்சியங்களைத் தடுக்கவும், விசாரணையைத் திசைதிருப்பவும் வாய்ப்புள்ளது.  

அதோடு, சாட்சியங்களை அழிக்கும் நோக்கில் தாங்கள் பயன்படுத்திய செல்போன் பதிவுகளை அழித்துள்ளனர். மேலும் அவர்கள் தற்போது உள்ள சாட்சிகளைக் கலைக்கவோ, அவர்களை அச்சுறுத்தவோ வாய்ப்புள்ளது.  இந்த காரணங்களைக் கருத்தில் கொண்டும், தற்போதைய நிலையில் அவர்கள் தரப்பில் எந்தவிதமான ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்படாததாலும், டிஎஸ்பி உள்ளிட்ட நான்கு பேரும் கொலை வழக்கிற்கான குற்றச்சாட்டைப் பதிவு செய்து வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

Source link