செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தில் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர். இப்படம் கடலில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூரியின் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் பேனர் வைத்தும் பட்டாசு வெடித்து படத்தை வரவேற்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் தாரதப்பட்டை முழங்க புலியாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கொண்டாட்டங்களும் அரங்கேறியது. இதன் நடுவே சூரி அந்த திரையரங்கிற்கு சென்றார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
படம் பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக இறுதி கட்ட காட்சி பிரம்மிக்க வைத்ததாக கூறுகின்றனர். இந்த சூழலில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக சூரி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எங்கள் மண்டாடி மீது நீங்கள் காட்டி வரும் அளவற்ற அன்புக்கும் மகத்தான ஆதரவுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் அன்பே எங்களின் மிகப்பெரிய பலம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
